நிலங்களின் வழிகாட்டி மதிப்பு உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது.
சொத்துக்களை பதிவு செய்வதற்கான வழிகாட்டி மதிப்பு கடந்த 1-ந் தேதி முதல் உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. பத்திரப்பதிவு அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சி.ராபர்ட் புரூஸ், நகர தலைவர் எஸ்.ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது ராபர்ட் புரூஸ் கூறியதாவது:-
தமிழகத்தில் பிற மாவட்டங்களில் நிலங்களின் வழிகாட்டி மதிப்பு 170 சதவீதம்முதல் 200 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் குமரி மாவட்டத்தில் 400 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் சாதாரண மக்கள் வீட்டுமனைகூட வாங்க முடியாத நிலையில் உள்ளனர். வீட்டுமனையின் விலைமதிப்பைவிட வழிகாட்டி மதிப்பு அதிகமாக உள்ளது. ஏழை, எளிய மக்களை பாதித்துள்ள இந்த கட்டண உயர்வை அரசு உடனே திரும்பப் பெறவேண்டும். திரும்பப் பெற வலியுறுத்தி குமரி மாவட்ட பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று முதல்-அமைச்சருக்கு மனு அனுப்புவோம். இதன்பிறகும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சென்னை கோட்டை முன் முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் குளச்சல் நகர தலைவர் சபீன், வட்டார தலைவர்கள் சேவியர் சுந்தர்ராஜ், தனபால், செல்வராஜ, ஜெரால்டு கென்னடி, வைகுண்டதாஸ், டோன்போஸ்கோ, மாவட்ட துணைத்தலைவர்கள் அய்யாத்துரை, விஜயகுமார், நடேசன், செல்லையாபிள்ளை, இரா.கதிரேசன், பொதுச்செயலாளர்கள் செல்வராஜ், ஜெரோம், நகர பொதுச்செயலாளர்கள் நாகராஜன், கவுன்சிலர் மகிழாள் டேவிட் மற்றும் நெல்லை சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.