விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், திருவில்லிப்புத்தூர், சுந்தரபாண்டியம் ஆகிய பகுதிகளில், சுமார் 60 நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்களில், சுமார் 10,000க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள், உறுப்பினர்களாகச் சேர்ந்து நெசவுத்தொழில் செய்து வருகின்றனர். அவர்களுக்கு, நெசவுத்தொழில் ஒன்றே வாழ்வாதாரம் ஆகும்.
இந்தச் சங்கங்களில் உற்பத்தியாகும் இலவச பாலி காட்டன் சேலைகளை, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்து அரசுக்கு வழங்குகிறது. அரசிடம் நல்ல விலை வாங்கி வைத்துக்கொண்டு, நெசவாளர்களுக்கு விலை நிர்ணயம் செய்து தராமல், காலம் தாழ்த்தி வருகிறது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு விலை வித்தியாசத் தொகையும் நெசவாளர் சங்கங்களுக்கு வழங்கப்படவில்லை.
உதாரணமாக, 5 மீட்டர் கைத்தறி சேலைகளுக்கு அரசாங்கமே விலை நிர்ணயம் செய்தது, சேலை ஒன்றுக்கு ரூ.126 .45 காசாகும். இந்தத் தொகை கூட நெசவாளர் சங்கங்களுக்கு வழங்கப்படவில்லை. கோ-ஆப்டெக்ஸ் மூலம் முதியோர்களுக்கு வழங்குவதற்காகக் கொள்முதல் செய்யப்பட்ட கைத்தறிச் சேலைகளுக்கு அரசு தக்க விலை நிர்ணயம் செய்து இருந்தபோதும், இதுவரை நெசவாளர் சங்கங்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் வழங்காமல் இழுத்தடிக்கிறது.
1.11.2011 முதல் கொள்முதல் செய்யப்பட்ட கைத்தறிச் சேலை ஒன்றுக்கு ரூ.165. 4 பைசா உத்தேச விலையும், பெடல்தறி சேலை ஒன்றுக்கு ரூ.141.42 பைசா உத்தேச விலையும் இதுவரை வழங்கப்படவில்லை. இதன்படி பார்த்தால், சுமார் இரண்டு கோடிக்கு மேல் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் நெசவாளர் சங்கங்களுக்கு வழங்க வேண்டும்.
இந்தத் தொகையை உடனடியாக வழங்காவிடில், நெசவாளர் சங்கங்களை மூடும் நிலை ஏற்படும். எனவே நெசவாளர்களின் துயர் துடைக்க அரசும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.