டெல்லியின் 3 மாநகராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. 3 மாநகராட்சிகளிலுமே பாரதிய ஜனதா கட்சியே முன்னிலை வகித்து வருகிறது.
டெல்லி மாநகராட்சியானது தெற்கு டெல்லி மாநகராட்சி, கிழக்கு டெல்லி மாநகராட்சி, வடக்கு டெல்லி மாநகராட்சி என 3ஆகப் பிரிக்கப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு ஒருங்கிணைந்த டெல்லி மாநகராட்சியாக இருந்தபோது நடத்தப்பட்ட தேர்தலில் பாரதிய ஜனதா வென்றது.
3 மாநகராட்சிகளாகப் பிரிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக நேற்று முன்தினம் வாக்குப் பதிவு நடைபெற்றது. அனைத்து மாநகராட்சிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.
தெற்கு டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 104 வார்டுகளில் 41-ல் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 29 இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ளது. சமாஜ்வாதி உள்ளிட்ட இதரகட்சிகள் 32 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
கிழக்கு டெல்லி மாநகராட்சியைப் பொறுத்தவரையில் மொத்தம் 64 வார்டுகள் உள்ளன. இதில் 30 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் மட்டும்தான் முன்னிலை பெற்றுள்ளது.
வடக்கு டெல்லி மாநகராட்சியில் 104 வார்டுகளில் 60 இடங்களில் பாஜகவும் 26 இடங்களில் காங்கிரஸும் முன்னணியில் உள்ளன மொத்தம் 33 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.