சமூக புரட்சியில் முகநூலின் பங்கு எந்த அளவிற்கு உள்ளது. அதை கண்டு ஒரு வல்லரசாகத் துடிக்கும் நாடு எப்படி பயப்படுகிறது என்பதற்கு இந்த செய்தியே சான்று.
ஜம்மு காஷ்மீர் மக்கள் கடந்த அறுபது ஆண்டுகளாக இந்தியாவிடம் இருந்து விடுதலை பெற போராடி வருகிறார்கள். அவர்கள் போராட்டத்தை இந்திய அரசு ராணுவத்தை கொண்டு அடக்கி வருவது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் காஷ்மீர் மக்கள் இணைய தளங்கள் மூலமாக காஷ்மீர் விடுதலைக்காக குரல் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள். பெரும்பாலான வாசகங்கள் 'இந்திய அரசே வெளியேறு' என்றும் , 'காஷ்மீர் தனி நாடு', 'சுதந்திரம் வேண்டும்' என்றே முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் காணப்படுகிறது. நடுவண் அரசு ஒரு சிறப்புக் குழுவை வைத்து ஆய்வு செய்கையில் இந்த உண்மை நடுவண் அரசுக்கு தெரியவந்தது. 2010 ஆம் ஆண்டு காஷ்மீரில் ஏற்பட்ட பெரும் கிளர்ச்சிக்கு இந்த முகநூல் பக்கங்களே காரணமாக இருந்தது. குறிப்பாக இந்த பக்கங்களில் பதிவான கருத்துக்கள் இந்திய ராணுவத்தின் ஒடுக்குமுறையை கண்டித்தே வெளிவந்தது. 2010 ஆம் ஆண்டில் ஒரு பள்ளி சிறுவனை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது .அதன் தொடர்ச்சியாக 113 பொது மக்கள் கொல்லப்பட்டனர் . அப்போது காஷ்மீர் மக்களிடையே ஏற்பட்ட கொந்தளிப்பு முகநூல் வாயிலாக வெளிவந்தது. இந்தியாவிற்கு எதிராக பல பக்கங்கள் முளைத்தது. அனைத்திலும் காஷ்மீர் மக்கள் தங்கள் உணர்வுகளை கொட்டத் தொடங்கினர்.
தற்போது இதனால் பயந்து போன இந்திய அரசு இப்படி முகநூல் முழுவதும் இந்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை யார் யார் பரப்புகிறார்கள் என்ற கண்காணிப்பு வேலையில் இறங்கி உள்ளது. இதில் அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய அரசுக்கு எதிரான பக்கங்களை கண்டறிந்து உள்ளனர் . இதை நிர்வாகம் செய்யும் நபர்களை கண்காணித்து வருவதுடன் சிலருக்கு சம்மன் அனுப்பியும் உள்ளது காஷ்மீர் காவல் துறை. இதற்காக சிறப்பு இணைய கண்காணிப்பு குழு ஒன்றும் அமைத்துள்ளது இந்திய அரசு. இந்திய உளவுத் துறையும் இதனோடு இணைந்து வேலை செய்து வருகிறது. இந்த குழுவிற்கு அதிநவீன வசதி கொண்ட கணினிகள் மற்றும் தொழில் நுட்பமும் உள்ளதாக தெரிகிறது. அதனால் யார் யார் இந்தியாவிற்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து பரப்பி வருகிறார்கள் என்பதையும் இந்திய அரசு கவனித்து வருகிறது. காவல் துறை இந்தியாவில் சுமார் 2000 துக்கும் அதிகமான இந்திய எதிர்ப்பு பக்கங்கள் இணையத்தில் இருப்பதாக தெரிவித்து உள்ளனர். குறிப்பாக காஷ்மீரில் நிலவிவரும் பதற்ற நிலையை கருத்தில் கொண்டு இணையத்தில் உருவாகும் புரட்சியை அடக்குவதற்கு காஷ்மீர் காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர் .
நடுவண் அரசுக்கு எதிரான கருத்துக்கள் காஷ்மீர் மாநிலத்தில் இருந்து மட்டும் வருவதில்லை. இந்தியா முழுவதும் பரவலாக மக்கள் இப்போது பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். தமிழகத்தில் தினம் தினம் மக்கள் இந்திய அரசின் துரோகத்தை முகநூலில் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். இனத்தின் உரிமைகள், மொழி உரிமைகள், நில உரிமைகள், நீர் உரிமைகள் இந்திய அரசு தமிழ் மக்களிடம் இருந்து பறித்துக் கொண்டிருப்பதை தமிழக மக்கள் சரமாரியாக விமர்சனம் செய்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் நெடு நாட்களுக்கு இந்திய அரசு மாநில மக்களை ஏமாற்ற முடியாது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது . படித்தவர்கள் இப்போது நிறைய கேள்விகள் கேட்க தொடங்கிவிட்டனர். அதனால் இந்திய அரசு தொடர்ந்து தன் அடக்கு முறையை கையாளமுடியாது, மக்களை ஏமாற்ற முடியாது என்பதே இணையதள பயன்பாட்டாளர்களின் கருத்தாக உள்ளது.
மேலும் இந்திய அரசு சீனாவை போல் அடக்குமுறையை கடைப் பிடிக்கக் கூடாது. இது ஒரு குடியரசு நாடு. இங்கு வாழும் மக்கள் அவர்கள் கருத்துக்களை சமூக வலைத் தளங்களில் சொல்லவதற்கு உரிமை உண்டு. இதற்கு இந்திய அரசு கட்டுபாடுகள் விதிக்கக் கூடாது என்று வலைப் பதிவாளர்கள் கருதுகின்றனர்.