Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டெல்லியில் இன்று முதல்வர்கள் மாநாடு

டெல்லியில் இன்று முதல்வர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்படுகிறது. மாநாட்டில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில முதல்வர்கள் மாநாடு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாநாட்டை பிப்ரவரியில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், 5 மாநில தேர்தல் மற்றும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் காரணமாக மாநாடு ஏப்ரலுக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால், மாநாட்டில் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது என்ற மத்திய அரசின் சர்ச்சைக்குரிய முடிவு குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. 

தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட பல மாநில முதல்வர்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தினர். இதை பரிசீலித்த மத்திய அரசு, தேசிய தீவிரவாத தடுப்பு மைய விவகாரம் தொடர்பாக விவாதிக்க மே 5ம் தேதி முதல்வர்கள் மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்தது. இந்த நிலையில், டெல்லியில் இன்று உள்நாட்டு பாதுகாப்பு நிலவரம் குறித்து விவாதிக்க முதல்வர்கள் மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள மாட்டார் என்று கொல்கத்தாவில் நேற்று அறிவிக்கப்பட்டது. அவர் சார்பில் மேற்கு வங்காள நிதி அமைச்சர் அமித் மித்ரா பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது. மம்தாவின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து மேற்கு வங்காள அரசு விளக்கம் எதையும் வெளியிடவில்லை. 

இன்றைய மாநாட்டுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமை வகிக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தொடக்க உரையாற்றுகிறார். இதில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத கட்டமைப்பு, நக்சலைட்களுக்கு வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளுடன் ஏற்பட்டுள்ள தொடர்பு, கடலோர பாதுகாப்பு, குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் தொடர்பாக தகவல்களை ஒருங்கிணைக்கும் தேசிய நெட்வொர்க் மற்றும் எல்லையோர பாதுகாப்பு பற்றி விவாதம் நடத்தப்பட உள்ளது. மாநில முதல்வர்கள் தங்கள் கருத்தை தெரிவிப்பார்கள். மாலையில், மாவோயிஸ்ட் நக்சலைட் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட 9 மாநில முதல்வர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post