தமிழ் நாட்டில் உள்ள அனல்மின்நிலையங்களுக்கு 14 லட்சம் டன் நிலக்கரி இந்தோனேஷியாவில் இருந்து இந்த மாத இறுதியில் வருகிறது. தமிழ்நாட்டில் மொத்த மின் உற்பத்தியை விட தேவை அதிகமாகவே உள்ளது. மொத்த உற்பத்தி 8,000 மெகாவாட். தமிழ்நாட்டில் காற்றாலை, நீர் மின்நிலையங்களில் நிரந்தரமாக மின்உற்பத்தி செய்ய முடியாது. நிரந்தரமாக கிடைப்பதே அனல் மின்உற்பத்திதான்.
அதிலும், நிலக்கரி பற்றாக்குறை ஏற்படும்போது, அனல் மின் உற்பத்தி குறைந்து விடும். தமிழகத்தில் எண்ணூர், வடசென்னை, மேட்டூர், தூத்துக்குடி ஆகிய 4 இடங்களில் அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றின் மூலம் மொத்தம் 2,700 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இது தவிர, வள்ளூரில் சோதனை ஓட்டம் முடிந்து, விரைவில் மின்உற்பத்தி தொடங்கவுள்ளது. இதேபோல், மேட்டூரில் சோதனை பணிகள் தொடங்கியுள்ளது.
இதனால் அனல் மின்நிலையங்களுக்கு நிலக்கரி தேவை அதிகரித்துள்ளது. ஏற்கனவே உள்ள ஒப்பந்தப்படி, பழைய அனல்மின் நிலையங்களுக்கு போதுமான நிலக்கரியை இந்திய நிலக்கரி கழகம் வழங்குகிறது. இதைவிட, நிலக்கரி தேவை அதிகமாக உள்ளதால், தனியார் நிறுவனங்களிடம் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தமிழ்நாடு மின்சார வாரியம் நேரடியாக நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறது.
இந்நிலையில் இந்தோனேஷியாவில் இருந்து இந்த மாத இறுதிக்குள் 14 லட்சம் டன் நிலக்கரியை கொள்முதல் செய்ய உள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை இந்திய நிலக்கரி கழகம் தான் வழங்கி வருகிறது. பற்றாக்குறையாக இருக்கும்போது, நாங்கள் தனியாரிடம் கொள்முதல் செய்து வருகிறோம். தற்போது புதிய அனல் மின்நிலையங்களில் உற்பத்தி தொடங்கவுள்ளது.
இதனால் நிலக்கரி தேவை அதிகரித்துள்ளது. நிலக்கரி பற்றாக்குறை ஏற்படாதவாறு இந்தோனேஷியாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 12ம் தேதி தூத்துக்குடி துறைமுகம் வழியாக 7 லட்சம் டன் நிலக்கரி கொள்முதல் செய்யப் பட்டது.
அதேபோல், எண்ணூர் துறைமுகம் மூலம் 14 லட்சம் டன் நிலக்கரியை இந்த மாத இறுதிக்குள் கொள்முதல் செய்யவுள்ளோம். இதனால் நிலக்கரி தட்டுப்பாடின்றி அனல்மின் நிலையங்களில் மின்உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.