Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆணையத்தின் புதிய நடவடிக்கை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் - ஜெ

நாட்டின் மின் உற்பத்தி மற்றும் விநியோகம் சீராகும் வரை, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய நடவடிக்கைகளை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும் என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடித விவரம் வருமாறு:

நாடு முழுவதும் கடுமையான மின் தட்டுப்பாடு இருப்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். கூடுதல் மின் உற்பத்தியில் மத்திய அரசின் இலக்கில் 50 சதவீதத்தைகூட இன்னும் எட்ட முடியவில்லை. ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு மின்சாரம் கொண்டு செல்வதற்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாததால், வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு மின்சாரம் வருவதில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில், மின்தொகுப்பு பகிர்மான அலைவரிசையை 49.5, 50.2 ஹெர்ட்ஸ் என்ற அளவில் இருந்து 49.7, 50.2 ஹெர்ட்ஸ் என்ற அளவுக்கு கட்டுப்படுத்த மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிசீலித்து வருகிறது. ஒரு யூனிட்டுக்கு ரூ 8.73 பைசாவில் இருந்து ரூ 9 ஆக உயர்த்தவும் ஆணையம் முடிவு செய்துள்ளது.

வெளிமாநிலங்களிலிருந்து பெறப்படும் மின்சாரத்துக்கு அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டால் உள்ளூர் பயன்பாட்டுக்கான மின்கட்டணம் மேலும் அதிகரிக்கும். ஏற்கனவே, தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இந்த சூழ்நிலையில் மத்திய மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் நடவடிக்கையால், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு கூடுதலாக ரூ 350 கோடி செலவாகும். தமிழகத்தில் இப்போதுள்ள மின்தடை நேரத்தை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். 

அப்படி ஏற்பட்டால் வேளாண் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். அத்துடன் நுகர்வோரும் கடுமையாக பாதிக்கப்படுவர். கிராமப் பகுதிகளில் பெரிதும் பாதிப்பு ஏற்படும். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியையும் இது பாதிக்கும். இதுகுறித்து தமிழக மின்துறை அமைச்சர், மத்திய மின்துறை அமைச்சருக்கு கடந்த 23.01.12 அன்று கடிதம் எழுதியிருந்தார். 

இதுநாள் வரை எவ்வித பதிலும் பெறப்படாத நிலையில், இதற்காக இடைக்கால நிவாரணம் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் கட்டாயம், தமிழக மின் பகிர்மானக் கழகத்துக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பிரச்னையில் பிரதமர் தலையிட்டு மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கைகளை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும். மாநிலங்களிடையே மின்சாரத்தை பகிர்ந்து கொள்ளும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, நாட்டின் மின் உற்பத்தி மற்றும் விநியோகம் சீராகும் வரை ஆணையத்தின் நடவடிக்கைகளை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post