Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

என்ஜினீயர்-பி.டி.ஓவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடராஜன்-திவாகரன் மீது புது வழக்கு

ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலருக்கு (பி.டி.ஓ) கொலை மிரட்டல் விடுத்ததாக சசிகலாவின் கணவர் நடராஜன் மீதும், பொதுப் பணித்துறை பொறியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் மீதும் போலீசார் புதிய வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் முள்ளங்குடி கொள்ளிடம் ஆற்றில் திவாகரன், புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேடுகுடியை சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் 25 பேர் அனுமதி இன்றி மணல் அள்ளியதாகவும் அதைத் தடுத்த பொதுப்பணித்துறை பொறியாளர் முத்துமணியை அவர்கள் மிரட்டியதாக புகார் கூறப்பட்டது.

இந் நிலையில் இப்போது அந்த புகாரின் அடிப்படையில் திவாகரன் மற்றும் 26 பேர் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திவாகரன் மீது ஏற்கனவே ரிஷியூர் கஸ்தூரி என்பவரது வீட்டை இடித்த வழக்கு, ரிஷியூர் முன்னாள் ஊராட்சி தலைவர் சோம.தமிழார்வன், கஸ்தூரி ஆகியோருக்கு கொலை மிரட்டல் வழக்கு உள்ளிட்ட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் வீட்டை இடித்த வழக்கிலும், தமிழார்வனுக்கு கொலை மிரட்டல் வழக்கிலும் திவாகரனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. ஆனால், மற்ற வழக்குகளில் அவர் தொடர்ந்து சிறையில் உள்ளார்.

அதே போல தஞ்சாவூர் அன்புநகரைச் சேர்ந்த ரங்கராஜன் (64) என்ற ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ) மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில்,

எனக்குச் சொந்தமான 22 சென்ட் நிலம் விளார் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தில் இருந்த மூங்கில் மரங்களை நடராஜன் மற்றும் அவரது அண்ணன் மகன் சுவாமிநாதன் ஆகியோர் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். இதைத் தட்டிக்கேட்ட எனக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து நடராஜன் மற்றும் சுவாமிநாதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே நில அபகரிப்பு வழக்கில் நடராஜனின் காவலை வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்து தஞ்சாவூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் உள்ள முள்ளிவாய்க்கால் படுகொலையில் இறந்தவர்களின் நினைவாக தஞ்சையை அடுத்த விளார் பகுதியில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த இடத்தின் அருகே தனக்கு சொந்தமான 2 கிரவுண்ட் நிலத்தை சசிகலாவின் கணவர் எம்.நடராஜன், சசிகலாவின் அண்ணன் மகன் டி.வி.மகாதேவன் மற்றும் சிலர் அபகரித்ததாக, அமலாபுஷ்பமேரி என்பவர் தஞ்சை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் எம்.நடராஜன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு காவல் முடிவடைந்ததை தொடர்ந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் திருச்சி மத்திய சிறையில் இருந்த நடராஜனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து அவரது சிறைக் காவலை வரும் 30ம் தேதி வரை நீட்டித்து தஞ்சை ஜூடீசியல் மாஜிஸ்திரேட் முருகன் உத்தரவிட்டார்.
[vuukle-powerbar-top]

Recent Post