வல்லவன் உதயராஜ்
சமீபத்தில் கொல்கத்தா சென்றிருந்தேன்,அங்கே இந்தி நுழைந்ததன் விளைவாக ஒருவர் பேசும் வங்காள மொழியே மற்றொரு வங்காளிக்கு புரிந்த கொள்ளமுடியாத அளவுக்கு இந்தி கலந்து பேசுவது போன்ற காட்சிகளையெல்லாம் காணமுடிந்தது,அங்கே இந்திக்காரர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபடுகிறார்கள், இங்கே ஆட்டோ இருப்பது போல் அங்கு 'டாக்ஸி' அதன் ஓட்டுனர்கள் முழுக்க பீகாரிகளாகவும் வேறு வடநாட்டு இந்தி பேசுபவர்களாகவும் இருக்கிறார்கள், வங்காள திரையுலகமே இந்தி படங்களின் வரவால் வீழ்ந்துவிட்டதாகவும், வங்காள மக்கள் பெரும்பாலும் இந்தி படங்களையே விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டதாகவும் அதனை மீட்க இளம் நடிகர்கள் முயற்சிப்பதாகவும் நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். இதெல்லாம் இந்தியை ஏற்றுக்கொண்ட ஒரு மாநிலம் இன்றைய நிலையில் எப்படியிருக்கிறது என்பதற்கான சாட்சி. இந்தியை ஏற்றுகொண்ட காரணத்தால் அவர்கள் வேலைவாய்ப்பு உயர்ந்துவிட்டதாக, அல்லது கலை பண்பாடு அறிவியலில் வங்காளிகள் உயர்ந்துவிட்டதாகவோ எந்த ஆதாரமும் இல்லை.
பலர் வேலையை முன்னிட்டு இந்தி வேண்டும் என்று இங்கு பேசிக்கொண்டிருக்கிறார்கள், இன்றைய உலகமயமாக்க சூழலில் வேலைக்கு இந்தியை காட்டிலும் ஆங்கிலமே அவசியமாக இருக்கிறது, ஆங்கிலத்தில் தமிழர்கள் சிறந்திருப்பதன் காரணமாகவே பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி படையெடுக்கிறார்கள். மேலும் இந்தி தெரிந்த வடநாட்டுக்காரகளே இங்கு வந்து பாணி பூரி விற்றுக்கொண்டிருக்கும் போது இவர்கள் இந்தி கற்று அப்புறம் வடநாட்டவர்களோடு போட்டியிட்டு வேலை பெறுவோம் என்பதெல்லாம் கேலிக்கூத்துதான்.