Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தென்சீனக் கடல் உரிமை தொடர்பாக சர்வதேச தீர்ப்பாயத்திடம் முறையிட பிலிப்பைன்ஸ் நாடு முடிவு

தென்சீனக் கடல் உரிமை தொடர்பாக கடல்சார் பிரச்சனைகளுக்கான சர்வதேச தீர்ப்பாயத்திடம் முறையிட பிலிப்பைன்ஸ் நாடு முடிவு செய்துள்ளது.

அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்சீனக் கடலின் ஸ்கார்பரோ தீவுப் பகுதியில் சீனா உரிமை கோருவதை எதிர்த்து சர்வதேச தீர்ப்பாயத்திடம் முறையிடப் போவதாகவும் சீனா தமது தரப்பு வாதத்தை தீர்ப்பாயத்திடம் எடுத்துச் சொல்லுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்சீனக் கடற்பரப்பில் பிலிப்பைன்ஸ் தமக்கு சொந்தமாக உரிமை கோரும் தீவுப் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீனமீன்பிடிக் கப்பல்களை அண்மையில் விரட்டியடித்தது. மேலும் தமது போர்க் கப்பல்களையும் அப்பகுதிக்கு அனுப்பி வைத்தது. இதற்கு சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன் பிலிப்பைன்ஸின் போர்க்கப்பலை வெளியேறுமாறும் எச்சரித்திருந்தது.

இதற்குப் பதிலடிகா பிரான்சு நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வில் ஈடுபட்டிருந்த பிலிப்பைன்ஸ் பதிவு எண் கொண்ட படகை சீன கடற்படையினர் அதிரடியாக சோதனையிட்டனர்.

இதைத் தொடர்ந்து தென்சீனக் கடல் விவகாரத்தை சர்வதேச தீர்ப்பாயத்திடம் எடுத்துச் செல்ல பிலிப்பைன்ஸ் முடிவு செய்திருக்கிறது.

இந்த சூழலில் தென்சீனக் கடற்பரப்பில் சர்ச்சைக்குரிய இடத்தில் பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்க போர்க் கப்பல்கள் கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. இதில் அமெரிக்காவின் 700க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் பிரம்மாண்ட போர்க்கப்பல்கள் கடற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளன.

தென்சீனக் கடற்பரப்பு முழுவதையுமே சீனா தமக்கு உரியதாக பிரகடனம் செய்கிறது. ஆனால் பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா போன்ற நாடுகளும் தங்களுக்கு உரிமை உள்ளதாக அறிவித்து வருகின்றன.

அண்மையில் தென்சீனக் கடற்பரப்பில் வியட்நாமுக்குச் சொந்தமான பகுதியில் எண்ணெய் அகழாய்வு மேற்கொண்ட இந்தியாவின் நடவடிக்கைக்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. ஆனால் தென்சீனக் கடல் உலகின் பொதுச்சொத்து என்று இந்தியா நெத்தியடியாக பதில் கொடுத்திருந்தது.

இந்நிலையில் சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே உருவான தென்சீனக் கடல் தொடர்பான மோதல் ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட சர்வதேச தீர்ப்பாயத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post