தேர்வு தோல்வி பயத்தில் தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
சென்னை புளியந்தோப்பு கே.எம் கார்டன் 10-வது தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். ஆட்டோ டிரைவர். இவருடைய மகள் அஸ்வினி (வயது 20). இவர் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி 2-ம் ஆண்டு படித்து வந்தார். தற்சமயம் அந்த கல்லூரியில் தேர்வு நடந்து வருகிறது.
கடந்த 11-ந் தேதி கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு அஸ்வினி வீட்டுக்கு வந்தார். வீட்டில் யாருடனும் பேசாமல் தனியாக சென்று அமர்ந்து கொண்டார்.
மிகவும் சோகமாக காணப்பட்ட அஸ்வினியிடம் அவருடைய தாய் விசாரித்தபோது, தேர்வு சரியாக எழுதவில்லை என்று தெரிவித்தார். தந்தையும் அவருக்கு ஆறுதல் கூறிவிட்டுச் சென்றார். இந்த நிலையில் மறுநாள் காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் அஸ்வினி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது ரேஷன் கடைக்கு சென்று வீடு திரும்பிய அவருடைய பாட்டியும், தாயும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த அஸ்வினியை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கதறி அழுதபடி, பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் அஸ்வினியை மீட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் அஸ்வினி மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று காலை அஸ்வினிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து புளியந்தோப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.