காட்டு மிருகங்களிடம் இருந்து தப்ப இரவு பஸ் வசதி வேண்டும் என்று ஊர்மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் கலெக்டர் கருணாகரன் தலைமையில் நடந்தது.
முகாமில் கோவை பீளமேடை சேர்ந்த ஒரு தனியார் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் ராதா கிருஷ்ணன், ராதா, வாணி, முருகானந்தம், மோகன் உள்ளிட்ட பலர், அதே பள்ளியின் பெற்றோர் மாணவர் நலச்சங்கத்துக்கு எதிராக கலெக்டர் கருணாகரனிடம் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:-
எங்கள் குழந்தைகள் படிக்கும் தனியார் பள்ளி பெற்றோர் சங்கத்தை சேர்ந்த சில பெற்றோர்கள் பள்ளியின் முன்பு நோட்டீசு ஒட்டுதல், பெற்றோர்களையும், குழந்தைகளையும் பள்ளி கட்டணம் செலுத்த வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறார்கள். ஆகவே இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பள்ளிக்கு வரும் குழந்தைகளிடம் நோட்டீசு கொடுத்து கட்டணம் செலுத்த வேண்டாம் என்று உங்கள் பெற்றோரிடம் கூறுங்கள் என்று வலியுறுத்துகின்றனர். பள்ளியின் முன்பு தினமும் மாலை நேரங்களில் நின்று கொண்டு வலியுறுத்துகின்றனர். கட்டாதே...கட்டாதே பீஸ் கட்டாதே என்று கோஷம் எழுப்பி வருகின்றனர். மேலும் அதில் சிலர் மது அருந்திக்கொண்டு வந்து தகாத வார்த்தைகளை பேசுகின்றனர்.
இதனால் பெற்றோர்களாகிய நாங்களும், எங்களுடைய குழந்தைகளும், கற்பிக்கும் ஆசிரியர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். மேலும் இந்த பள்ளியின் கல்வி கட்டணம் எங்களுக்கு முழு திருப்தி அளிக்கிறது. இதர பயிற்சிகளும் நன்கு கற்றுத்தரப்படுகின்றன. எங்களுடைய விருப்பத்தின் பேரில் எங்களுடைய குழந்தைகளின் எதிர்கால முன்னேற்றத்துக்காக மேற்கூறிய சிறப்பு பயிற்சிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆகவே எங்களுடைய குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு அந்த பயிற்சிகளை எங்கள் குழந்தைகளுக்கு தொடர்ந்து அளிக்க வேண்டும். சங்கத்தின் பெயரில் சிலர் இடைïறு செய்வதை தடுத்தி நிறுத்தி அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மற்றும் கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் லட்சுமணன், சதீஸ், ராஜசேகர் உள்ளிட்ட 10 பேர் நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், கோவை சட்டக்கல்லூரியில் படிக்கும் எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாணவர்களில் பழங்குடியின மாணவ-மாணவிகள் 18 பேருக்கு மட்டும் இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதை நம்பித்தான் நாங்கள் படிக்க வேண்டி உள்ளதால், மிகுந்த கஷ்டப்பட்டு வருகிறோம். ஆகவே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் அதில் கூறி உள்ளனர்.
இது போல் ஆலாந்துரை பேரூராட்சி பகுதியில் உள்ள காளி மங்கலம்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், எங்கள் கிராமம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. எங்கள் கிராமத்தில் சுமார் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். எங்கள் பகுதிக்கு பஸ் வசதி இல்லாததால் நாதே கவுண்டன் புதூரில் இருந்து 2 கி.மீட்டர் நடந்துதான் வரவேண்டி உள்ளது. இரவு வேளைகளில் காட்டு மிருகங்கள், விஷப்பாம்புகள் அச்சுறுத்தல் உள்ளதால் நாங்கள் மிகவும் அச்சப்படும் நிலை உள்ளது. ஆகவே கோவையில் இருந்து மாலை வேளைகளில் இயக்கப்படும் இரண்டு அரசு பஸ்களை எங்கள் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் அதில் கூறி உள்ளளர்.