சென்னை மேற்கு தாம்பரத்தில் நேற்று முன்தினம் காலை காணாமல் போன 6 வயது குழந்தை சென்டிரல் புறநகர் ரெயில் நிலையத்தில் நேற்று மதியம் மீட்கப்பட்டது.
சென்னை மேற்கு தாம்பரம் கடப்பேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் காதர். இவர் அங்குள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய குழந்தை ஆகாஷ் (வயது 6). நேற்று முன்தினம் மதியம் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த ஆகாஷை திடீரென காணவில்லை. இதைக் கண்டு பதற்றமடைந்த பெற்றோர் பல இடங்களில் குழந்தையை தேடி அலைந்தனர். ஆனால் ஆகாஷ் கிடைக்கவில்லை.
பின்னர் இதுகுறித்து தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை ஆகாஷை யாரேனும் கடத்தி சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சென்டிரல் புறநகர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் நேற்று மதியம் ஒரு குழந்தை அழுதுக் கொண்டே அங்கும், இங்கும் சுற்றி வருவதை கண்ட பயணிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் சென்டிரல் ரெயில் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் விரைந்து சென்று பிளாட்பாரத்தில் தனியாக தவித்த அந்த குழந்தையை மீட்டார்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த குழந்தை தாம்பரத்தில் காணாமல் போன காதரின் குழந்தை ஆகாஷ் என்பது தெரிய வந்தது. உடனே இதுபற்றி தாம்பரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தாம்பரம் போலீசார் மற்றும் ஆகாஷின் பெற்றோர் சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அங்கு இன்ஸ்பெக்டர் சேகர் சிறுவன் ஆகாஷை அவர்களிடம் காட்டி உறுதி செய்துகொண்டார். அதன்பிறகு அந்த குழந்தையை காதரிடம் ஓப்படைத்தார். எனினும் தாம்பரத்தில் இருந்து ஆகாசை சென்டிரலுக்கு கடத்தி வந்தது யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.