பஸ் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து சென்னை மைலாப்பூர் மாங்கொல்லையில் தி.மு.க. சார்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதி பேச உள்ளார்.
இதற்காக தி.மு.க.வினர் நேற்று மாலையே அப்பகுதியில் பேனர்கள் அமைத்து வந்தனர். இரவு 8 மணி அளவில் ஜீப்பில் வந்த 4 பேர், லஸ் கார்னர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 2 பேனர்களை கிழித்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து கேள்விப்பட்ட தி.மு.க.வினர் அங்கு திரண்டு வந்தனர். பின்னர், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே, போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து, சாலை மறியலை கைவிட்டு, தி.மு.க.வினர் புறப்பட்டனர்.