தமிழக காங்கிரஸ் கட்சிக்கு சட்டசபையில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.இதுவரை அறை இல்லாமல் தவித்து வந்த ஐந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கும் தற்போது பெரும் பிரச்சினை தீர்ந்துள்ளது.
கடந்த சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு ஏகப்பட்ட எம்.எல்.ஏக்கள் இருந்தனர். அதாவது 35 பேர் இருந்தனர். நடப்பு சட்டசபையில், அந்த 35ல் மூன்று காணாமல் போய் வெறும் 5 பேர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். இதனால் அவர்களுக்கு இதுவரை அறை கிடைக்கவில்லை. உட்கார்ந்து ஆலோசனை நடத்தக் கூட இடம் இல்லாமல் தவித்து வந்தனர்.
கடந்த சட்டமன்றத்தில் பெரிய அறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த அவர்களுக்கு இந்த முறை பத்துக்குப் பத்து ரூம் கூட கிடைக்காததால், தவித்து வந்த அவர்களுக்கு இப்போது நிம்மதியைக் கொடுத்துள்ளனர். அதாவது அறை கொடுத்து விட்டனர்.
தற்போது எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ள தேமுதிகவுக்கு கொடுக்கப்பட்டுள்ள அறைக்குப் பக்கத்தில் காங்கிரஸுக்கு ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்துள்ளது சட்டசபை செயலகம்.
இதன் மூலம் ஆற அமர உட்கார்ந்து பேச காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு இடம் கிடைத்துள்ளது.