Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கையின் காலிப்பகுதியில் தமிழர்களின் வீட்டுக்கு தீவைப்பு.

காலி எல்பிட்டி, திலிதுற தோட்டத்தில் வசிக்கும் தமிழ்க்குடும்பங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு, அவர்களின் ஏழு வீடுகளும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. 

சிங்கள இளைஞர்கள் சிலரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக இணைத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து இணையத்தளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

எல்பிட்டி, திலிதுற தோட்டத்தில் உள்ள சிப்பாய் ஒருவர் விடுமுறையில் ஊருக்கு வரும்போது அங்குள்ள தமிழ் குடும்பங்களைச் சந்தித்து தன்னை "சேர்' அல்லது "மாத்தயா' என்றுதான் அழைக்க வேண்டும் என அச்சுறுத்தி வந்துள்ளார். எனினும் எல்லோருமே இலங்கை நாட்டு பிரஜைகள்தான் என்று கூறி அந்தச் சிப்பாய்க்கு அடிபணிய, திலிதுற தோட்ட தமிழ்க் குடும்பங்கள் மறுத்து வந்துள்ளன. 

இதனால் இந்த மக்கள் மீது சிப்பாய்க்கு கடும் கோபம் இருந்து வந்துள்ளது. கடந்த 11ஆம் திகதி புதுவருட விடுமுறையில் வந்த சிப்பாய், திலிதுற தோட்டத்திற்குச் சென்று இளைஞர் ஒருவரிடம் தன்னை "சேர்' என அழைக்கும்படி வற்புறுத்தியுள்ளார். எனினும், குறித்த இளைஞன் அதற்கு மறுப்புத் தெரிவித்ததால், "புதுவருட தினத்தன்று உங்களை பார்த்துக் கொள்கிறேன்'' என்று குறித்த சிப்பாய் மிரட்டிவிட்டுச் சென்றுள்ளார். குறித்த சிப்பாய் மிரட்டிய படியே நேற்றுமுன்தினம் காலை 10 மணியளவில் திலிதுற தோட்டத்துக்கு வந்து, தன்னை "சேர்' என்று அழைக்க மறுத்த இளைஞனை அவருடைய வீட்டுக்குள் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து அருகில் இருந்த தமிழ் இளைஞர் ஒருவர் அவ்விடத்திற்கு வந்து "ஏன் அடிக்கிறீர்கள்?'' என்று நியாயம் கேட்டுள்ளார். அதன்பின் குறித்த இடத்திற்கு திடீரென வந்த இருபதுக்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் தமிழ் இளைஞர்கள் இருவர் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்த 10 வீடுகளை தீயிட்டு எரித்துள்ளனர். அதுமட்டுமல்லாது முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் போன்றவற்றிற்கும் தீ வைத்து எரித்துள்ளனர். 

மேலும், குறித்த வீடுகளில் இருந்து தங்க நகை, பணம் மற்றும் வாகன உரிமம், தொலைக்காட்சி என்பவற்றையும் களவாடிச் சென்றுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் சுமார் 90 லட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர். தாக்குதல் சம்பவம் குறித்து எல்பட்டி பொலிஸ் நிலையத்தில் உடனடியாக முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து அப்பகுதிக்கு பொலிஸார் வந்துள்ளனர். 

பொலிஸார் வந்து நின்றதை கண்ட பின்னும் அதைப்பற்றிக் கணக்கில் எடுக்காத சிங்கள இளைஞர்கள், மீண்டும் தமிழர்களின் வீடுகளுக்கு தீ வைத்து எரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸார் அவ்விடத்திற்கு வந்து இருபகுதியினரையும் சமரசம் செய்யவே அதிக முயற்சி செய்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு தமிழ் இளைஞர்களை பொலிஸார் கைது செய்ததோடு மேலும், சில தமிழ் இளைஞர்களை பெயர் குறிப்பட்டு தேடி வருகின்றனர். 

இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்தின் போது காயமடைந்த சிப்பாய் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமிந்தகுமார் மற்றும் சந்திரகுமார் என்ற இரு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post