மேற்குலக நாடுகள் தொடர்பாக இலங்கை அரசு அண்மைக்காலமாக வெளியிட்டு வரும் குற்றச் சாட்டுகள், விமர்சனங்களால் கொழும்பில் உள்ள மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் இலங்கை அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள், அரச நாடாளுமன்ற உறுப் பினர்கள் ஆகியோர் மேற்குலகு மீது தொடர்ச்சியாகப் பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றமையே மேற்குத் தூது வர்களின் சீற்றத்துக்கும் அதிருப்திக்கும் காரணம் என்று கூறப்படுகின்றது.
அரசின் இந்தச் செயற்பாடுகள் தொடர்பாக மேற்குலகத் தூதுவர்கள் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கும் சுட்டிக் காட்டியுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் மேலும் கூறின.
மேற்கு நாடுகளில் உள்ள சில இலங்கைத் தூதரகங்களை மூடவுள்ளதாக அரசு வெளியிட்ட கருத்தே தூதுவர்களைச் சீற்றத்தின் உச்சத்துக்குக் கொண்டு போயுள்ள தாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவருடன் பேசிய மேற்கு நாடு ஒன்றின் தூதுவர், தூதரகங்களை மூடுவதால் பின்னடைவை எதிர்நோக்கப் போவது நாங்கள் அல்ல, நீங்கள் தான் என்று கொழும்பில் பிரபல ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற புத்தாண்டு இரவு விருந்தின் போது கூறியுள்ளதாகத் தெரியவருகிறது.
அண்மைக்காலமாக மேற்குலக நாடுகளின் மீது விமர்சனங்களை முன்வைத்து வந்தது இலங்கை அரசு. ஜெனிவாவில் இலங்கை மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அரசின் இந்தச் செயற்பாடுகள் மேலும் தீவிரமடைந்திருக்கிறது. இலங்கை மீதான தீர்மானத்துக்கு மேற்கு நாடுகள் அனைத்தும் ஆதரவு வழங்கியமையே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்தவும், அமைச்சர்களும் இப்போது வெளிப்படையாக பொதுக் கூட்டங்களில் மேற்கு நாடுகள் மீது வசைபாடி வருகின்றனர். நாட்டைப் பிளவுபடுத்த மேற்குநாடுகள் சூழ்ச்சி செய்து வருவதாக ஜனாதிபதி அடிக்கடி குற்றஞ்சாட்டி வருகிறார்.
இலங்கையின் ஆட்சியைக் கவிழ்க்க மேற்குலகு முயற்சிப்பதாக அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இந்தக் கருத்துகளாலேயே மேற்கு நாடுகளின் தூதுவர்கள் கடும் சினமடைந்துள்ளதாகவும், அவர்கள் இது தொடர்பில் தமது அதிருப்தியை இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் வெளியிட்டுள்ளதாகவும் ராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.
இலங்கையில் அமைதியும் சமாதானமும் ஏற்படவேண்டும் என்றே மேற்கு நாடுகள் விரும்புகின்றன. ஆட்சி மாற்றத்தையோ, நாட்டை பிளவுபடுத்துமாறோ நாம் கேட்கவில்லை. அனைத்து இன மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றோம். மனித உரிமை மீறல்களையே நாம் கண்டிக்கின்றோம்.
அதற்கு அப்பால் வேறு எதுவும் இல்லை என மேற்கு நாடுகளின் தூதுவர்கள் வெளிவிவகார அமைச்சிடம் சுட்டிக் காட்டியுள்ளதாகவும் தெரியவருகிறது.