திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் மதுபானம் விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 93 மதுபாட்டிகள் மற்றும் ரூ.ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில், அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நத்தம் அருகேயுள்ள ஒடுக்கம்பட்டியில் டீக்கடையில் வைத்து மதுபானம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரிதா தலைமையிலான போலீசார் சென்று அந்த கடையை சோதனை செய்து, மதுவிற்ற மூக்கன் என்பவரை கைது செய்தனர். மேலும் திண்டுக்கல்-பழனி சாலையில் லாரி பேட்டை அருகே டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மதுபானம் விற்ற ஒய்.எம்.ஆர்.பட்டி ஜெயச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் பழனி மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பழனி இட்டேரி சாலை, ஆர்.எப்.சாலை பகுதிகளில் அனுமதியில்லாமல் மதுபானம் விற்பனை செய்த சிக்கந்தர்பாட்சா, சேக்பரித் ஆகியோரை கைது செய்தனர்.
சின்னாளப்பட்டி பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது திண்டுக்கல்-மதுரை சாலையில் அண்ணாமலையார் மில்ஸ்மேடு பகுதியில் திருட்டுத்தனமாக மதுபானம் விற்பனை செய்வதை கண்டறிந்தனர். இது தொடர்பாக பித்தளைப்பட்டி சிவக்குமார், கொல்ராம்பட்டி நாகராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
இதன்மூலம் அனுமதி இல்லாமல் மதுபானம் விற்பனை செய்ததாக ஒரே நாளில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 93 மதுபாட்டில்கள், ரூ.ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. திருட்டுத்தனமாக மதுபானம் விற்பனை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.