மின் தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் உத்தேச திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று பிரதமரை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இந்தியா முழுவதும் கடுமையான மின்சார பற்றாக்குறை நிலவி வருவதை தாங்கள் நன்கு அறிவீர்கள். கூடுதல் மின் உற்பத்தி செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 50 சதவீதத்தைக்கூட எட்டாத நிலையில் இந்திய அரசு சிரமப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், மின் பகிர்மான அலைவரிசையை மேலும் கட்டுப்படுத்துவது என்று மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திட்டமிட்டிருப்பது, மின் பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
குறிப்பாக, மின்சாரம் கொண்டு செல்ல பாதை கிடைக்காததால், வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் பெற முடியாத நிலையில் உள்ள தமிழ்நாட்டிற்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்.
மின்சாரம் கொண்டு செல்லும் பாதையின் நிலைப்பு தன்மையை காரணம் காட்டி, மின் தொகுப்பு பகிர்மான அலைவரிசையை மேலும் கட்டுப்படுத்துவதுடன், அதற்கான குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.8.73-ல் இருந்து ரூ.9 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. அதனால், மின்சாரத்தை பெறுவதற்கான செலவு அதிகரித்து, உள்ளூர் பயன்பாட்டுக்கான மின் கட்டணம் மேலும் அதிகரிக்கும்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஏற்கனவே கடனில் சிக்கித்தவிக்கும் நிலையில், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தேச திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.350 கோடி நிதிச்சுமை ஏற்படும்.
தற்போது மின் பகிர்மான அலைவரிசை சரியாக இருப்பதையும், மின் பற்றாக்குறை நிலவுவதையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, மத்திய அரசின் இந்த நடவடிக்கை இப்போதைய சூழ்நிலையில் முற்றிலும் தேவையற்றதாகும்.
இந்த நடவடிக்கையால், தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டு உள்ள மின்வெட்டு நேரத்தை மேலும் அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்படும். அதன் காரணமாக தமிழக மக்களுக்கு குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மின் நுகர்வோருக்கும், விவசாய உற்பத்திக்கும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும்.
இந்த பிரச்சினை குறித்து மத்திய மின்சாரத்துறை மந்திரிக்கு 23-1-2012 அன்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. மின் பயன்பாட்டில் ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொண்டு, இந்த பிரச்சினை குறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இடைக்கால நிவாரணம் பெற வேண்டிய நிலைக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தள்ளப்பட்டு உள்ளது.
இருந்தாலும் இந்த பிரச்சினைக்கு உறுதியான தீர்வு காணும் வகையில், மின்சார தேவை மற்றும் சப்ளையில் சமநிலை ஏற்பட்டு, தற்போதைய நிலைமை சீரடையும் வரை மின்தொகுப்பு பகிர்மான அலைவரிசையை கட்டுப்படுத்தும் முடிவை ஒத்திவைக்குமாறு மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகளுக்கு தாங்கள் அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.