போலியோ என்னும் இளம்பிள்ளை வாதத்தை ஒழிக்க, நாடு முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, ஆண்டுதோறும் 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான முதல் தவணை பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம், கடந்த பிப்ரவரி 19ம் தேதி நடந்தது. இதில், தமிழகம் முழுவதும் 65.80 லட்சம் குழந்தைகளுக்கும், சென்னையில் மட்டும் 4.41 லட்சம் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது. முகாமில் விடுபட்ட குழந்தைகளுக்கு, அடுத்த ஓரிரு வாரங்களில் வீட்டுக்கே சென்று சொட்டு மருந்தை சுகாதாரத்துறையினர் போட்டனர்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான 2வது தவணை பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம், தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இதற்காக, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி , மருத்துவமனைகள், பள்ளிகள் என 40 ஆயிரம் சிறப்பு மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டிருந்தது. பயணங்களில் ஈடுபட்டிருக்கும் குழந்தைகளுக்காக பஸ், ரயில் மற்றும் விமான நிலையங்களில் கூடுதலாக 1,000 மையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எளிதில் செல்ல முடியாத தொலை தூரமுள்ள கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளுக்காக, சுமார் 1,000 நடமாடும் குழுக்களையும் சுகாதாரத் துறை அனுப்பியது.
இந்த பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள், தன்னார்வ தொ ண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என சுமார் 2 லட்சம் பேர் ஈடுபட்டிருந்தனர். பொது சுகாதாரத்துறை இயக்குனர் பொற்கைபாண்டியன் கூறியதாவது: இந்திய அளவில் கடந்த 18 ஆண்டுகளாக, ஆண்டுக்கு 2 தவணைகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப் பட்டு வருகிறது. இதனால், இந்தியாவில் ஓராண்டாக போலியோ பாதிப்பு இல்லை. தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளாக போலியோ நோயினால், எந்த குழந்தையும் பாதிக்கப்படவில்லை. தமிழகத்தில் நடந்த 2வது தவணை முகாமில் 65 லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது. இந்த முகாமில் விடுபட்ட குழந்தைகளுக்கு வீடு வீடாகச் சென்று போலி யோ சொட்டு மருந்து போடப்படும்’’ என்றார்.