இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு நிலைமை திருப்திகரமாக உள்ளது. இருப்பினும் இடதுசாரி வன்முறை பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. நாட்டில் ஏற்படும் பாதுகாப்பு சவால்களை சமாளித்து வெற்றி பெற மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று உள்நாட்டுப் பாதுகாப்புக்கான முதல்வர்கள் மாநாடு நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
அவரது உரையின் முக்கிய அம்சங்கள்
மத்திய அரசும், மாநில அரசுகளும் உள்நாட்டுப் பாதுகாப்பில் தோளோடு தோள் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.
நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு நிலைமை திருப்திகரமாகவே உள்ளது. இருப்பினும் இடதுசாரி தீவிரவாதம் மற்றும் நக்சல் வன்முறை ஆகியவை பெரும் அச்சுறுத்தல்களாக உள்ளன. இவற்றை தீவிரமாக கண்காணிக்க வேண்டியது அவசியமாகும்.
உள்நாட்டுப் பாதுகாப்பில் நாம் இன்னும் நெடுந்தொலைவு போக வேண்டியுள்ளது. மக்களின் போர் என்ற பெயரில் மாவோயிஸ்ட் நக்சலைட்கள் நடத்தி வரும் தாக்குதல்களால் உள்ளூர் மக்கள்தான் கடும் பாதிப்பை சந்திக்கின்றனர்.
தகவல் தொடர்பு சாதனங்களைத் துண்டிப்பதாலும், தகர்ப்பதாலும், வெளிநாட்டினரைக் கடத்துவதாலும் ஒரு பயனும் இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டும்.
தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் குறித்து முதல்வர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தப்படும். அதில் எந்த மாநில முதல்வருக்கும் துளியும் சந்தேகம் தேவையில்லை. தீவிரவாதத்தை எதிர்த்து நிற்பதில், போரிடுவதில் மாநிலங்கள்தான் முன்னணியில் உள்ளன.
இது பாராட்டுக்குரியது.
வட கிழக்கு மாநிலங்களில் அடிப்படைக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். இதற்கான திட்டங்கள் அமலாக்கப்படும்போது, அந்தப் பகுதிகளில் இயல்பு நிலை சாத்தியமாகும். வட கிழக்கு மாநிலங்களில் உள்ள நிலைமை சற்றே சிக்கலானது. வளர்ச்சிகாக ஒதுக்கப்படும் நிதியை தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடப் பயன்படுத்த வேண்டிய நிலை துரதிர்ஷ்டவசமானது என்றார் பிரதமர்.