Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அசாமையும் கைப்பற்றி வரும் மாவோயிஸ்டுகள்: முதல்வர்கள் மாநாட்டில் ப.சிதம்பரம் தகவல்

வடகிழக்கு மாநிலமான அசாமிலும் மாவோயிஸ்டுகள் தங்களது நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருப்பதாக டெல்லியில் நடைபெற்ற முதலமைச்சர் மாநாட்டில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர்கள் மாநாட்டில் ப.சிதம்பரம் பேசியதாவது: உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் மாநில அரசுகள்தான் முதன்மையானவை. மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்குமான உறவில் எந்த ஒரு சிக்கலும் இல்லை. கடந்த பல ஆண்டுகளை ஒப்பிடுகையில் 2011-ம் ஆண்டில் வன்முறை பெருமளவு குறைந்து போயுள்ளது. 

மதரீதியான தீவிரவாதம் அதிகரிப்பது என்பதும் அதனை இந்தியர்கள் ஆதரிப்பதும் என்பதும் கவலைக்குரியது. பயங்கரவாதத்தைத் தடுக்க 2010-ம் ஆண்டு வகுக்கப்பட்ட திட்டமானது கை கொடுத்திருக்கிறது. இருப்பினும் இன்னும் பல பகுதிகளில் போதுமான காவல்நிலையங்கள், காவலர் பற்றாக்குறை என்பது இருக்கவே செய்கிறது. 

நாட்டின் பெரிய அச்சுறுத்தலான நக்சலைட்டுகளின் நடவடிக்கையை ஒடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிச்சயம் உறுதுணையாக இருக்கும். மாவோயிஸ்டுகளின் வன்முறைக் கூடாரமாக இப்போது அசாமும் உருவாகிவிட்டது. 

ஜனநாயகத்தின் ஒவ்வொரு பகுதியையுமே மாவோயிஸ்டுகள் தங்களது ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். அதனையே நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் திசை திருப்புகின்றனர். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் முழு அடைப்புகளை நடத்துகின்றனர். 

நக்சல்களை ஒடுக்கும் நடவடிக்கையின் போது அவர்களது ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக விமர்சிக்கின்றனர். ஜம்மு காஷ்மீரைப் பொறுத்தவரை வன்முறை அங்கு குறைந்துவிட்டது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் 2 பயங்கரவாத சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டுவிட்டன. 2011-ம் ஆண்டில் மொத்தம் 18 பயங்கரவாத சதித்திட்டங்கள் தகர்க்கப்பட்டுள்ளன என்றார் சிதம்பரம்.
[vuukle-powerbar-top]

Recent Post