இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்களை கைது செய்வதற்காக நடத்தப்பட்ட தேடுதல்களின் போது. கைது செய்யப்பட்ட 20 சீனர்களும், சீனத் தூதரகத்தின் தலையீட்டையடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை வெளிநாட்டவர்களைக் குறிவைத்து இலங்கை காவல்துறை கொழும்பில் இந்த தேடுதலை மேற்கொண்டது.
இதன்போது உரிய ஆவணங்கள் இன்றி, காலாவதியான நுழைவிசைவுடன் இருந்த 20 சீனர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் சீனர்கள் மட்டும் நேற்றுக்காலைக்கு முன்னதாகவே விடுவிக்கப்பட்டனர்.
சம்பவத்தைக் கேள்வியுள்ள சீனத் தூதரகம் இலங்கை காவல்துறைமா அதிபர் மற்றும், வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்ததை அடுத்தே அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
கொள்ளுப்பிட்டி காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சீனர்களை விடுதலை செய்வதற்கு சீனத் தூதரக அதிகாரியே நேரில் சென்று நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதேவேளை, இந்த தேடுதலின்போது கைதான ஏனைய நாட்டவர்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அண்மைக்காலமாக சீனர்கள் நடமாடும் வியாபாரிகளாக பொருட்களை விற்றுவருவது அதிகரித்துள்ளது.
சிலாபம், நீர்கொழும்பு, கோட்டே, அம்பாந்தோட்டை, தங்காலை, கண்டி ஆகிய இடங்களைக் குறிவைத்தே சீனர்கள் கைபேசி, வாசனைத் திரவியங்கள், ஆடைகள், சப்பாத்துகள் போன்றவற்றை விற்றுவருவது குறிப்பிடத்தக்கது.