வருடா வருடம் வரும் கார்த்திகை 27ம் திகதியை இலங்கைத் தமிழ் மக்கள் ஒருபோதும் மறந்துபோக மாட்டினம் பாருங்கோ… அந்த நாள் மக்கள் உணர்வுகளோடு கலந்திட்ட ஓர் நாள். எவ்வளவுதான் அடக்குமுறை வந்தாலும் தடைகள் வந்தாலும் அந்த நாளை தமிழ் மக்கள் மனங்களிலிருந்து எடுத்துவிட முடியாது.

அடிக்க அடிக்கத் தான் கத்தியும் கூராவது போல் அந்த நாளில் அதை இல்லாதொழிக்க அரங்கேற்றப்படும் அடாவடிகளும் சண்டித்தனங்களும் மீண்டும் மீண்டும் அதனை நினைவுபடுத்தவே செய்யும். வன்முறைகளால் தமிழனின் மன உணர்வை மாற்றிவிடலாம் எண்டு சிங்களத் தரப்பினர் இன்னுமும் தான் நம்பிக்கொண்டிருப்பது வேடிக்கையாக தந்தை செல்வா காலத்திலிருந்து ஆயுதப் போராட்டம் வெடித்துக் கிழம்பி அது தணிந்து போகும் வரைக்கும் பெரும்பான்மையினரால் சிறுபான்மை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையான அடக்கு முறைகள் அனைத்தும் பொய்த்துப் போனதை இன்னும் தான் சிங்கள அரசும் சிங்கள மக்களும் புரிந்து கொள்ளவில்லை என்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்குப் பாருங்கோ…
இலங்கைத் தமிழன் இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து தனது உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராட்டி வருகின்றான். இந்தப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை சாத்வீக ரீதியிலான போராட்டம் மூலமும் அஹிம்சை வழிப் போராட்டம் மூலமும் ஆயுத வழிப் போராட்டம் மூலமும் தியாகம் செய்து இதுவரை வந்திருக்கிறான். இப்படிப்பட்ட அடங்காத் தமிழனின் கடந்த கால வரலாறுகளை பார்த்த பிறகுமா இந்த இலங்கை அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை…?

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மன உணர்வுகளை அடக்குமுறையால் தான் கட்டுப்படுத்தவோம் என இராணுவத்தினரும் பொலிஸாரும் கங்கணம் கட்டி நிற்பது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதற்கு சமம்.
இரண்டு நாட்கள் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் வன்முறைப் போக்கோடு நடந்து கொண்ட விதம் மீண்டும் யாழ்ப்பாண இளம் சமூகத்தினரின் இரத்தத்தை சூடேற்றுவதைப் போல் நடந்திருக்குப் பாருங்கோ…
பட்ட துயரங்கள் போதும் இனி அரசியல் ரீதியில் போராடி உரிமைகளை வெல்வோம் என பொறுமை காத்திருக்கும் தமிழ் சனத்தை சீண்டிப்பார்ப்பது போல் இருக்கு.
கடந்த 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்ட இடம் யாழ். பல்கலைக்கழகம்தான் என்பதை சிங்கள அரசு நன்கு உணர்ந்து வைத்திருக்கின்றபோது மீண்டும் அங்கேயே இளம் சமுதாயத்தை அடக்குமுறையால் அடக்கப் பார்ப்பது இன்னுமொரு ஆயுதக் கிளர்ச்சிக் குழு உருவாக்குவதற்கு வழிகோலும் என்பதை ஏன் விளங்கிக் கொள்ளத் தவறுகின்றது.
எத்தனை எத்தனை ஆண்டுகள் கடந்து போனாலும் கார்த்திகை 27 ஆம் திகதியை தமிழ் மக்கள் மறந்துவிடப்போவதில்லை. ஏனெனில் அந்த நாள் தமிழர்களின் மன உணர்வுகளோடு ஒன்றித்துப்போன நாள். தமிழ் மக்களின் அதிகமான குடும்பங்களில் ஒன்றோ இரண்டோ உறுப்பினர்கள் விரும்பியோ விரும்பாமலோ அன்று நடந்த ஆயுதப் போராட்டத்தில் இணைந்து உயிர் பலியானார்கள்.
மனித இனத்தில் இறப்பு என்பதை உணர்வு ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த இழப்பின் நினைவை எந்த ஆயுதங்களைக் கொண்டோ மகிழ்வூட்டல்களைக் கொண்டோ அறவே அழித்து விடமுடியாது பாருங்கோ… இறந்து போனவர்களை நினைத்து கண்ணீர் விட்டு அழுதால்தான் அந்த இழப்பின் துயரை ஆற்றிக் கொள்ள முடியும்.
இது இன, மத, மொழி கடந்து எல்லா மனித உயிர்களுக்குமே பொருத்தமான ஒரு மன உணர்வு சார்ந்த விசயம். இதை எப்படிப் பாருங்கோ நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியும்…?
இந்த நாளும் நிகழ்வும் தமிழர்களின் உணர்வுகளோடு ஒன்றித்து விட்டது. இதனை வன்முறை கொண்டு ஒருபோதும் அழித்து விட முடியாது.
தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்காகவே இராணுவத்தினர் வடக்கிலும் கிழக்கிலும் குடியிருக்கினம் என இராணுவத் தளபதிகள் அறிவிக்கினம். அதை உலகிற்கு காட்ட அவ்வப்போதும் உதவிகளும் செய்து வருகினம். இது மட்டும் போதாது தமிழரின் மனங்களை வெல்வதற்கு. அவர்களின் உணர்வு சார்ந்த விடயங்களுக்கும் இராணுவத்தினர் மதிப்பளிக்கவேண்டும்.
அதன் மூலம் தான் மனங்களை வெல்லமுடியும். ஒரு கையால் கொடுத்துக் கொண்டு மறு கையால் கிள்ளி விளையாடுவதான செயற்பாடுகளால் மனங்களை வெல்லமுடியாது.
கட்டளைகளுக்குப் பணிந்து செயற்படும் இராணுவத்தினரும் பொலிஸாரும் தமிழ் மக்களின் உணர்வலைகளை முதலில் புரிந்து நடக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழனின் மதம் சார்ந்த வழிபாடுகளில் ஒன்றான கார்த்திகை விளக்கீட்டில் எரியும் சுட்டிகளை சப்பாத்துக் கால் கொண்டு உதைத்து உடைப்பது அவர்களின் மனங்களை வெல்ல உதவாது பாருங்கோ… மாறாக இன்னும் இன்னும் மனதில் உடைவையே ஏற்படுத்தும்.
இறந்து போனவர்களை நினைவு கூறும் தமிழர்களின் மன உணர்வுக்கு எப்போது சிங்கள அரசாங்கமும் இராணுவத்தினரும் பொலிஸாரும் மதிப்பளித்து நடக்க முயற்சிக்கின்றார்களோ அன்றுதான் தமிழ் மக்களின் மனங்களை அவர்களால் முழுமையாக வெல்லமுடியும்.
இன நல்லிணக்கத்துக்கும் இதுதான் வழிசமைக்கும் பாருங்கோ..