தமிழகத்தில் கூலிப்படைகள் உருவாக மதுவே காரணம்:வைகோ -----------------------------------------------------------------
தூத்துக்குடி: ""தமிழகத்தில் கூலிப்படைகள் உருவாக மதுவே காரணம்'' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ குற்றம்சாட்டினார். தமிழகத்தில், பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, 2வதுநாள் விழிப்புணர்வு பிரசார நடைபயணத்தை, தூத்துக்குடிமாவட்டம் காந்திநகரில், நேற்று காலை வைகோ துவங்கினார். சொக்கன்குடியிருப்பு, வடக்குஉடைபிறப்பு,மணிநகர், நெய்யூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக, தொண்டர்களுடன் வந்த அவர், வழியில், ஆசிரியர் பயிற்சி கல்லூரி மற்றும் பள்ளி மாணவ,மாணவியரை சந்தித்து, மதுவின் தீமை குறித்தும், அதை ஒழிக்கவேண்டியதன் அவசியம் குறித்தும், துண்டுபிரசுரம் தந்து வலியுறுத்தினார். மதுஒழிப்பு கொள்கையில் உறுதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
உடன்குடியில் வைகோ பேசியதாவது: தி.மு.க.,- அ.தி.மு.க., அரசுகள் மதுக்கடைகளை திறந்தன. இதனால், சமுதாயம் சீரழிந்துவருகிறது. பள்ளி மாணவன் கூட, மதுக்கடைக்கு சென்று மது அருந்தும் பழக்கம் தற்போது பரவிவருகிறது. மூன்று வயது பெண்குழந்தையிடம் தந்தை தவறாக நடப்பது உள்ளிட்ட பல்வேறு சமுதாய சீர்கேடு நடவடிக்கைகளுக்கு மதுவே காரணம். அரசு ஆண்டிற்கு ஒரு குடும்பத்திற்கு 10,000 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவி வழங்குகிறது. ஆனால், ஒரு குடும்பத்தில் ஒருவர் மதுகுடித்தால், ஆண்டிற்கு 1 லட்சம் ரூபாய் வீணாகிறது. கூலிப்படைகள் உருவாக மதுவே காரணம், என்றார். மாலையில், அங்கிருந்து நடைபயணத்தை துவக்கிய வைகோ, இரவு, திருச்செந்தூர் பொதுக்கூட்டத்தில் பேசினார்.