இலங்கை காவல்துறையினர், பணியின் போது ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது என்றும், பற்றன் பொல்லுகளை மாத்திரம் எடுத்துச் செல்லுமாறும் இலங்கையின் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான அறிவுறுத்தலை அவர், இலங்கை காவல்துறை மா அதிபருக்கு அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ள கோத்தாபய ராஜபக்ச,
“மோசமான குற்றவாளிகளைக் கைது செய்வது போன்ற சிறப்பு நடவடிக்கை கள் தவிர்ந்த வழக்கமான காவல்துறைக் கடமைகளுக்குச் செல்லும்போது, துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல வேண்டிய தேவையில்லை.
அமைதியான சூழல் நிலவும் நாட்டில், காவல்துறையினருக்கு தன்னியக்கத் துப்பாக்கிகள் அவசியமில்லை.
ஆட்களைக் கைது செய்யும்போது குறைந்தளவு பலத்தையே பயன்படுத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய நடைமுறை தொடர்பான உத்தரவு ஏற்கனவே காவல்துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்த சுற்றறிக்கையில், தன்னியக்க ஆயுதங்கள், கைத்துப்பாக்கிகளை அதிகாரம் பெற்ற அதிகாரிகள் கொண்டு செல்வதற்கான சிறப்பு சூழ்நிலைகள் என்னவென்றும் பட்டியலிடப்பட்டுள்ளது.
முக்கிய பிரமுகர்கள் வதிவிடங்களில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள, சோதனைச்சாவடிகளில் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கப்படுவர்.