ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பூகோள கால மீளாய்வு விவாதம் இன்று நடைபெறவுள்ளது.
இதில் இலங்கை மீது கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஐ நா மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் 192 உறுப்பு நாடுகளின் மனிதஉரிமை நிலைமைகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படுகிறது.
இதன்போது, மனிதஉரிமைகளை மேம்படுத்தவும், மனிதஉரிமைகள் தொடர்பான கடப்பாடுகளை பின்பற்றவும் எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை விளக்க ஒவ்வொரு நாட்டுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.
இலங்கை குறித்த விவாதம் இன்று பிற்பகல் 2.30 மணி தொடக்கம் 6 மணிவரை இடம்பெறும்.
இதில் கேள்விகளை எழுப்பி உரையாற்றுவதற்கு 99 நாடுகள் விருப்பம் வெளியிட்டுள்ளன.
இதனால், ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதிக்கும் 72 செக்கன்கள் மட்டுமே உரையாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது இலங்கைக்கு கடுமையான அழுத்தங்களை கொடுக்கும் வகையில் பல்வேறு மனிதஉரிமைப் பிரச்சினைகள், மனிதஉரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்டமீறல்கள் குறித்த கேள்விகளை எழுப்ப பல்வேறு நாடுகளும் தயாராகியுள்ளன.
அதேவேளை, கடந்த மார்ச் மாத அமர்வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை தோற்கடிக்கும் முயற்சியில் தோல்வி கண்ட இலங்கை அரசாங்கம், இம்முறை தாம் அதிக நாடுகளின் ஆதரவைப் பெற முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அமர்வில் உறுப்பு நாடுகளின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காக இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க, முன்னாள் சட்டமாஅதிபர் மொகான் பீரிஸ் உள்ளிட்டவர்கள் அடங்கிய உயர்மட்டக்குழு ஜெனிவா சென்றுள்ளது.
இந்த அமர்வின் பின்னர், இந்தியா, ஸ்பெய்ன் மற்றும் பெனின் ஆகிய நாடுகள் இணைந்து ஒரு அறிக்கையை தயாரிக்கும்.
அந்த அறிக்கைத் தீர்மானம் வரும் 5ம் நாள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்படும்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் பொறிமுறைக்கு உட்படுத்தப்படும் பிற உறுப்பு நாடுகளைப் போலவே, இந்தத் தீர்மானத்தை இலங்கையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.