Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தீபாவளி வெடி விபத்து முன்னெச்சரிகையாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஏற்பாடு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசுக்கள் வெடிக்கும் போது எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளில் காயம் அடைப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சைக்கு மிகவும் பிரபலமானது. இதன் காரணமாக சென்னை மட்டுமின்றி வெளி மாநிலங்கள், மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் தீபாவளி பண்டிகையையோட்டி, பட்டாசு விபத்துக்களில் காயம் அடைப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் ஜெயராமனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

முதலில் பட்டாசுக்களை வெடிக்கும் போது குழந்தைகள் கவனமாக வெடிக்க வேண்டும். அருகில் தண்ணீரையும், மணல்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை அணிந்து பட்டாசுக்களை வெடிக்க கூடாது.

பட்டாசுகளை வெடிக்கும்போது எதிர்பாரதவகையில் ஏற்படும் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ளது.

சிறிய தீக்காயங்களுடன் வருபவர்களுக்கு உடனடியாக புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படும். பெரிய தீக்காயங்களுடன் சிகிச்சை பெற வருபவர்களுக்கென்று, தீக்காய சிகிச்சை பிரிவில் பெண்களுக்கு 4 படுக்கைகளும், ஆண்களுக்கு 4 படுக்கைகளும், குழந்தைகளுக்கு தனியாக 5 படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தீக்காயத்திற்கான மருந்து, மாத்திரைகள் அனைத்தும் தயார்நிலையில் உள்ளது. சென்ற வருடம் தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசு விபத்து காரணமாக 22 பேர் சிகிச்சை பெற்றனர். இந்த வருடம் இதுவரை 3 பேர் பட்டாசு விபத்துக்காரணமாக சிகிச்சை பெற்றுள்ளனர். இவ்வாறு டாக்டர் ஜெயராமன் கூறினார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை பிரிவில் 10 நர்சிங் மாணவிகள் உள்பட கூடுதல் நர்சுகள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு அரசு நர்சிங் சங்கத்தின் மாநில தலைவி அறிவுக்கண் தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post