இலங்கையில் மனிதஉரிமைகள் மீறப்படுவது குறித்து ஆராய்வதற்கான கண்காணிப்புக் குழுவொன்றை அமைக்கவுள்ளதாக, மலேசிய நாடாளுமன்ற ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது.
மலேசிய அமைச்சர் டருக் சேரி நஸ்ரி அசீஸ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
“சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் மனிதஉரிமை மீறல்கள் உள்ளிட்ட இலங்கையில் இடம்பெறும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து கவலை கொண்டுள்ள ஆளும்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இணைந்து கொள்ள இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
ஐ.நா தீர்மானத்தின் முன்னேற்றங்கள் குறித்து இந்தக் குழு தொடர்ந்து கண்காணிக்கும்.
இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நாம் இலங்கைக்கு ஒரு கடிதம் அனுப்பவுள்ளோம்.
நாம் இலங்கைக்கு எதிரானதாகப் பார்க்கவில்லை. ஆனால், தமிழர்களுக்கு எதிரான மனிதஉரிமை மீறல்களாகப் பார்க்கிறோம்.
மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச மலேசியா வருவதை நாடாளுமன்ற ஆலோசனைக்குழு எதிர்த்தது.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எல்லா இன நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கிய 25 பேர் கொண்ட இந்த ஆலோசனைக் குழு மலேசியாவின் பிரதி அமைச்சர் டருக் எஸ்.கே.தேவமணி தலைமையில் செயற்படுவது குறிப்பிடத்தக்கது.