தடுப்பிலுள்ள முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு அனுப்பப்படுகின்ற கடிதங்கள் தனிச் சிங்களத்தில் உள்ளதால் பெற்றோர் செய்வதறியாது திணறுகின்றனர். இறுதிக்கட்டப் போரின் பின்னர் இராணுவத்திடம் சரண்அடைந்த முன்னாள் போராளிகளில் பலர் இன்னமும் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிலரை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்பான விவரங்களைக் கோரி சிறைச்சாலை அதிகாரிகளால் உறவினர்களுக்குக் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன.
அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்தும் தனிச் சிங்கள மொழியில் காணப்படுவதால் அதை வாசித்து அதில் உள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ள முடியாமல் அவர்கள் திண்டாடுகின்றார்கள்.
வட்டுவாகல் பகுதியில் வசிக்கும் வயோதிபப் பெற்றோருக்கு இவ்வாறு அனுப்பப்பட்ட கடிதத்தை கிராம சேவையாளர் ஒருவரிடம் காட்டி ஒப்பமிடுமாறு அவர்கள் கேட்டுள்ளனர்.
கடிதம் சிங்களத்தில் இருந்ததால் அதில் என்ன விடயம் கூறப்பட்டுள்ளது என்பது தனக்குப் புரியவில்லை என்பதை விளக்கிய கிராம அலுவலர், அந்த நிலையின் தன்னால் கையொப்பம் இடமுடியாத சிக்கலை எடுத்துக் கூறியுள்ளார்.
இந்தநிலையில் பெற்றோர் மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாது திணறுகின்றனர்.