யாழ். குடாநாட்டில் இராணுவத்தினருக்கு அரச காணிகளை ஒதுக்குமாறு கேட்கப்பட்டு வரும் நிலையில், இங்கு ஒரு காணித்துண்டு கூட இல்லாமல் 11,500 குடும்பங்கள் நிரந்தரமாக வசிக்கின்றன என்று வடமாகாணப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பதிவுகளில் இருந்து பெறப்பட்ட புள்ளி விவரமே இது எனத் தெரிவிக்கும் அதிகாரிகள் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கலாம் என்று கருதுகின்றனர். “காணிகள் இல்லாத மக்களின் சரியான எண்ணிக்கை எம்மிடம் இல்லை’ என்று “உதயனி’டம் தெரிவித்தார் யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்.
எனினும் வடமாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தில் உள்ள ஆவணங்களில் 11,500 குடும்பங்களுக்கு காணிகள் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் மக்களுக்குக் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் பொருட்டு காணிக் கச்சேரிகளை வடமாகாணக் காணி ஆணையாளர் அலுவலகம் நடத்தவுள்ளது.
இதற்காக ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலுமுள்ள காணியற்றோரின் விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. கோப்பாய், நல்லூர், யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளிலேயே அதிகளவான குடும்பங்கள் காணிகள் இல்லாமலுள்ளன.
இந்த நிலையில் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அலுவலகம் கடந்த ஜூன் மாதம் யாழ். மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட காணியற்ற குடும்பங்களுக்குத் தலா 2 பரப்பு வீதம் காணி வழங்கப்படும் என்றும் அப்போது அது அறிவித்துள்ளது.
ஆனால், காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான பல ஏக்கர் காணிகளை படையினர் தமது முகாம்களை அமைப்பதற்கு வழங்க வேண்டும் என்று கோரி காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.