இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நீடித்து நிலைக்கத்தக்க அரசியல்தீர்வு ஒன்றை எட்டுவதற்கு உதவி கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னாபிரிக்கா செல்லவுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தப் பயணம் இடம்பெறும் என்று தமிழ்த் தேசியக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
"முடங்கிப் போயுள்ள இலங்கை அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்களை மீளத் தொடங்குவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வரும் தென்னாபிரிக்கா, தமது நாட்டுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நாம் தென்னாபிரிக்காவுக்கு செல்லவுள்ளோம். ஆனால், இன்னமும் பயண நாள் முடிவு செய்யப்படவில்லை.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர் இப்ராகிம் இஸ்மாயில் தலைமையிலான குழு, எரிக் சொல்ஹெய்ம் தலைமையிலான நோர்வே குழு, புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட பயனுள்ள கலந்துரையாடல் பெர்லினில் நடந்துள்ளது.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.