
இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை முதல் முறையாகப் பார்க்கும் ஐந்து பேரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்தக் குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை அடிப்படையாக வைத்து ஒரு ஆவணப்படத்தை தயாரிக்கும்படி பட்டதாரி மாணவர்களிடம் ஐரிஎன் தயாரிப்பு நிறுவனம் கேட்டிருந்தது.
அந்த தயாரிப்பு அணியில் இருந்த 30 வயதுடைய, லண்டனைத் தளமாக கொண்ட திரைப்பட தயாரிப்பாளரும் எழுத்தாளருமான கிறிஸ்ரினா பிச்சி புதுமையான வகையில் ஒரு குறும்படத்தை தயாரித்துள்ளார்.
“அதிர்ச்சி தரக்கூடிய படங்களை உள்ளடக்கியது என்ற எச்சரிக்கையுடன் இலங்கையின் கொலைக்களங்கள் தொடங்குகிறது, அது உண்மை.
ஆவணப்படத்தை வைத்து ஒரு காணொளியை திருத்துமாறு கேட்டபோது, அது மிகையானதாக நான் உணர்ந்தேன். எல்லாமே அதில் முக்கியமானதாக இருந்தது.
எனவே நான் வித்தியாசமான அணுகுமுறையை கையாள முடிவெடுத்தேன்.
Eyes On The Ground இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை முதல்முறையாகப் பார்க்கும் ஐந்து பேர் பற்றிய ஒரு சாதாரணமான ஆவணக் காணொளிப் படம்.
இது மனித உணர்வுகளையும், அதை ஏற்றுக்கொள்ளும் – குழப்ப நிலையை வெளிப்படுத்தும் வகையில், சாதாரணமாக எல்லோராலும் பார்க்கத்தக்க வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது நீதி கிடைக்கச் செய்வதற்கான ஒரு சிறிய அடி” என்று கிறிஸ்ரினா பிச்சி தெரிவித்துள்ளார்.
இவரது குறும்படம் லண்டன் அனைத்துலக ஆவணப்பட விழா, லண்டன் தேசிய ஓவியக் கண்காட்சி உள்ளிட்ட திரைப்பட விழாக்களிலும் கண்காட்சிகளிலும் திரையிடப்பட்டுள்ளன.
கிறிஸ்ரினா பிச்சி, பிசா பல்கலைக்கழகத்தில் ஐரோப்பிய இலக்கியங்களில் முதுகலைப்பட்டம் பெற்றதுடன், கோல்ட் ஸ்மித் பல்கலைக்கழகத்தில் திரை ஆவணப்படுத்தலில் முதுமாணி பட்டம் பெற்றவர்.
“இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை மையமாக வைத்து பட்டதாரி மாணவர்கள் தயாரித்த ஆறு ஆவணப்படங்களை தயாரித்துள்ளனர். இவையெல்லாமே மிகச்சிறந்தவை.” என்று இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை தயாரித்த ஐரிஎன் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கிறிஸ் சோ தெரிவித்துள்ளார்.
Eyes On The Ground குறும்படத்தை இந்த முகவரியில் http://www.channel4.com/news/sri-lankas-killing-fields-eyes-on-the-ground பார்க்க முடியும்.