Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை இராணுவம் விலக்கப்படவேண்டும் - த.தே.கூட்டமைப்பு கோரிக்கை


இலங்கைத் தீவில் நீண்ட காலமாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது நிறைவடைந்த பின்னரும், முன்னர் புலிகள் அமைப்பின் மையத் தளமாகக் காணப்பட்ட யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தினர் பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதால் இங்கு நிலைகொண்டுள்ள படையினர் உடனடியாக விலக்கப்பட வேண்டும் என இலங்கையின் பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 20 வரையான மாணவர்கள் காயமடைந்ததுடன், இவர்களில் ஏழு மாணவர்கள் சிகிச்சை பெற வேண்டிய நிலையிலுள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது யாழ்ப்பாணத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

போரில் உயிர்களை இழந்த தமிழ்ப் புலிகளை நினைவுகூருவதற்காக திட்டமிடப்பட்டிருந்த நிகழ்வை தடுக்கும் முகமாகவே யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த பாதுகாப்புப் படையினர் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், இதனால் யாழ்ப்பாணத்தில் பதற்றநிலை மீண்டும் உருவாகியுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் குற்றம் சுமத்தியுள்ளார்.

"இதனை எதிர்த்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்ட போது, இதனை முறியடிக்கும் முகமாக இராணுவத்தினரும் காவற்துறையினரும் மாணவர்கள் மீது கொடுரத் தாக்குதல்களை மேற்கொண்டனர். இவ்வாறான அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காகவே யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள படையினரை உடனடியாக அகற்றுமாறு நாம் தொடர்ந்தும் கோரிவருகிறோம்" எனவும் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.


சில ஊடகவியலாளர்கள் காவற்துறையினராலும், சிவில் உடையிலிருந்த பாதுகாப்பு படையினராலும் தாக்கப்பட்டுள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

யாழ் பல்கலைக்கழகத்தில், இலங்கையில் வாழும் 20 மில்லியன் சனத்தொகையில் 12 சதவீதத்தைக் கொண்ட தமிழ் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களே அதிகம் கல்விகற்கின்றனர். 

இலங்கையின் பெரும்பான்மை சமூகமான சிங்களவர்களைக் கொண்ட இலங்கை இராணுவமானது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ப் புலிகளை யுத்தத்தில் தோற்கடித்த அதேவேளையில் பல்வேறு யுத்தமீறல்களையும் புரிந்ததாக அனைத்துலக சமூகம் கண்டித்திருந்தது. 


கடந்த புதனன்று பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை முறியடிக்கும் நோக்கில் இலங்கை காவற்துறையினர் தாக்குதலை மேற்கொண்டதை அமெரிக்கா கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 

"கடந்த புதனன்று பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை குழப்பும் நோக்கில் உள்ளுர் இலங்கை காவற்துறையினரும் இலங்கை இராணுவத்தினரும் மேற்கொண்ட தாக்குதல்களும், சுதந்திர ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பிடியாணை எதுவுமில்லாது ஊடகவியலாளர்கள் சோதனை செய்யப்படுதல் போன்றன ஊடக சுதந்திரத்தைப் பாதிக்கின்றது" என அமெரிக்க அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களுக்கு பெயர்போன புலிகள் அமைப்பில் உயிர்நீத்தவர்களை 'சட்ட ரீதியற்ற' முறையில் பல்கலைக்கழக மாணவர்கள் நினைவுகூர திட்டமிட்டிருந்ததாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

எதுஎவ்வாறிருந்த போதிலும், யாழ் பல்கலைக்கழகத்தில் காணப்பட்ட புலிகளுக்கு ஆதரவான துண்டறிக்கைகளையும் சுவரொட்டிகளையும் காவற்துறையினர் அகற்றியபோது, அதற்கு ஆதரவாக இலங்கை
பாதுகாப்புப் படையினர் அங்கு சென்றதாகவும் இதனை விட வேறெந்த தாக்குதல்களிலும் அவர்கள் பங்குபற்றவில்லை எனவும் இராணுவப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

"புதனன்று பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது அங்கு ஏற்படும் சனநெருக்கடியைக் கட்டுப்படுத்துவதற்காக பணியில் ஈடுபட்டிருந்த காவற்துறையினருக்கு உதவியாக சிறிலங்கா பாதுகாப்புப் படை வீரர்களை அனுப்புமாறு கேட்கப்பட்டிருந்த போதும், அங்கு மிகக் குறைந்தளவானவர்களே இருந்ததால் இராணுவத்தினரை அனுப்ப வேண்டியேற்படவில்லை" என இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் றுவாண் வனிகசூரிய தெரிவித்துள்ளார். 

கொழும்பிற்கு வடக்காக 400 கிலோமீற்றர் தொலைவிலுள்ள யாழ்ப்பாணத்தில் குவிக்கப்பட்டுள்ள படையினரை அங்கிருந்து அகற்றி, பொதுமக்களின் செயற்பாடுகள் மீது ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குமாறு இலங்கை அரசாங்கத்தை அனைத்துலக சமூகம் தொடர்ந்தும் கோரி வருகிறது. 

தமிழ் மக்களின் கலாசார மையமாக விளங்கும் யாழ்ப்பாணத்தில் முன்னர் புலிகள் தமது நடைமுறை நிர்வாகத்தை மேற்கொண்டிருந்தனர். தனித்தாய்நாடு கோரி 1972லிருந்து புலிகள் அமைப்பால் ஆரம்பிக்கப்பட்டு நீண்ட காலமாகத் தொடர்ந்த போரில் 100,000 வரையான மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டதாக ஐ.நா மதிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவனின் வாகனத்தின் கதவுகள் பாதுகாப்பு படையினரால் அடித்து நொருக்கப்பட்டதாக கூறப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது எனவும், பல்கலைக்கழக மாணவர்களால் எறியப்பட்ட கற்களே வாகனத்தை சேதப்படுத்தியதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவத்தை தடுக்க முற்பட்ட போது அங்கிருந்த காவற்துறையினர் அல்லது இராணுவத்தினரின் தாக்குதலிலேயே தனது வாகனம் சேதமாக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவசர காலச் சட்டமானது கடந்த ஆண்டில் தளர்த்தப்பட்ட போதும், இலங்கை காவற்துறையினருக்கு ஆதரவாக இலங்கை பாதுகாப்பு படையினரும் துணை ஆயுதக்குழுக்களும் ஈடுபடலாம் என்பதை சட்டம் அனுமதித்துள்ளதாக தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தினர் தெரிவித்து வருகின்றனர். 
[vuukle-powerbar-top]

Recent Post