ஈழத்தமிழ் இனப்படுகொலையைத் தடுக்கத் தவறிய குற்றவாளிதான் ஐ.நா.அமைப்பாகும். தமிழ் இனக்கொலையை விசாரிக்க
அனைத்து நாடுகள் குழுவை நியமிக்க வேண்டும்!
வைகோ அறிக்கை.
இலட்சக்கணக்கன ஈழத்தமிழர்களை ஈவு இரக்கமின்றிக் கோரமாகப் படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசுக்கு முப்படை ஆயுதங்களையும், வழங்கி, மற்ற அணு ஆயுத வல்லரசுகளிடம் ஆயுதம் வாங்குவதவதற்கும் சிங்கள அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைத் தந்து தமிழ் இன அழிப்பு யுத்தத்தை நடத்திய இந்திய அரசு, நடைபெற்ற தமிழ் இனக்கொலையின் கூட்டுக் குற்றவாளியாகும்.
குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தோர், களத்தில் ஆயுதம் ஏந்தாதோர் என அனைத்துத் தமிழர்களையும் சிங்கள அரசு, உலகில் தடைசெய்யப்பட்ட குண்டுகளை வீசி 2008 ஆம் ஆண்டில் தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து படுகொலையை நடத்தியபோது அதைத் தடுப்பதற்கோ வெளி உலகத்திற்கு உண்மை கொண்டு வருவதற்கோ, ஐக்கிய நாடுகள் மன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிங்கள அரசின் மிரட்டுலுக்குப் பயந்து ஐ.நா. மன்ற அதிகாரிகள் ஈழத்தமிழர்களைக் காக்கும் கடமையைச் செய்யாமல் இலங்கையை விட்டு வெளியேறியது மன்னிக்கமுடியாத குற்றமாகும்.
‘எங்களை இந்த அழிவில் தவிக்க விட்டுப் போய் விடாதீர்கள்’ என்று தமிழர்கள் காலில் விழுந்து மன்றாடி இருக்கிறார்கள். மனித நேயத்தைக் காற்றில் பறக்கவிட்டு ஐ.நா. அதிகாரிகள் வெளியேறியது மிகப் பெரிய தவறு என்று அப்போது வெளியேற மறுத்த ஐ.நா அதிகாரி பென்சமின் டிக்ஸ் கூறியுள்ளார்.
இலங்கைத் தீவில் ஐ.நா. மன்றத்தின் நடவடிக்கைகளை உள் ஆய்வு செய்த அதிகாரி சார்லஸ் பெட்ரி இறுதியாக ஐ.நா.வுக்குத் தந்த அறிக்கையில் முக்கியமான 30 பக்கங்கள் நீக்கப்பட்டதாக வந்த செய்தி அதிர்ச்சி தருகிறது. 2009 மே மாதம் வரையில் ஈழத்தமிழர்களைக் காக்கத் தவறிய ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான் கீ மூன், 2010 ஜனவரி டப்ளின் தீர்ப்பாய அறிக்கைக்குப் பின்னரே - மனித உரிமையில் கவலை கொண்டவர்கள் பல நாடுகளில் இருந்து தங்கள் குமுறலைக் கொட்டிய பிறகே - 2010 ஜூன் 22 ஆம் தேதி இலங்கைத் தீவில் நடந்தவற்றை அறிய மார்சுகி தருஸ்மான், ஸ்டீவன் ராட்னர், யாஸ்மின் சூக்கா ஆகிய மூவர் குழுவை நியமித்தார். 2008 செப்டம்பரில் இருந்து 2009 மே 19 வரை நடைபெற்ற சம்பவங்களை அம்மூவரும் ஆய்வு செய்தனர்.
இந்த அறிவிப்புக்கு சிங்கள அதிபர் ராஜபக்சே, சக அமைச்சர் ஒருவரின் தலைமையில் பான் கீ மூனை இழிவுபடுத்தி போராட்டம் நடத்தினான். ஐ.நா. கொடிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. மார்சுகி தருஸ்மான் தலைமையிலான குழு நடத்திய ஆய்வும், தந்த அறிக்கையும், உலகெங்கிலும் மனித நேயம் உள்ளோரை மனம் பதறச் செய்தது. அந்த அறிக்கையிலேயே 1 லட்சத்து 37 ஆயிரம் தமிழர்கள் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டனர் என்ற தகவலை ஊன்றி படித்தால் அறியலாம். ஆனால் உண்மையில் 3 இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
இலண்டன் சேனல் 4 வெளியிட்ட இசைப்ரியா கொலை செய்தியும், எட்டு ஈழத்தமிழ் இளைஞர்கள் நிர்வாணமாகக் கண்களும் கைகளும் கட்டி இழுத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியும் மூவர் அறிக்கையில் இடம்பெற்றன. ஈழத்தமிழர்களின் படுகொலை குறித்து அனைத்து உண்மைகளையும் அறிய சுதந்திரமான ஒரு விசாரணை குழு அனைத்து நாடுகள் சார்பில் அமைக்கப்பட வேண்டுமென்று மார்சுகி தருஸ்மான் மூவர் குழுவே ஐ.நா பொதுச்செயலாளருக்கு அப்போதே பரிந்துரை செய்தது.
நெஞ்சை நடுங்க வைக்கும் ஈழத்தமிழர்கள் படுகொலை குறித்த உண்மைகள் ஓரளவு வெளிவந்துள்ளன. 2009 ஆம் ஆண்டு ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் சிங்கள அரசைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றிய படுபாதகச் செயலை இந்திய அரசும், கியூபா அரசும் முன்னின்று நடத்தின. ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்குப் பொருளாதார தடை விதித்த போது சிங்கள அதிபர் ராஜ பக்சேவை இந்தியாவுக்கு இரு முறை அழைத்து வந்து வரவேற்பு கொடுத்து உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவ முயன்றது காங்கிரஸ் தலைமையிலான இந்தியஅரசு.
உண்மைகளை முன்கூட்டி அறிகின்ற மதி நுட்பத்தோடு தியாக தீபம் முத்துக்குமார் தனது மரணசாசனத்தில் ஈழத்தமிழர் படுகொலைக்கு உடந்தையாக செயல்பட்ட துரோகிகளை அடையாளம் காட்டியதோடு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் மீதும் சரியாக குற்றச்சாட்டை வைத்தார். ஈழத்தமிழரைப் படுகொலை செய்த சிங்கள அரசுக்கு உடந்தையாக செயல்பட்டோரும், தமிழ்நாட்டுத் தமிழர்களை வஞ்சகமாக ஏமாற்றியோரும் உள்ளிட்ட துரோகிகள் எல்லாம் ஈழத்தமிழர் உரிமைக்குக் குரல் கொடுப்பதாகச் சொல்லும் மோசடி நாடகத்தின் முகத்திரையைக் காலம் கிழித்து எறியும்.
உலகில் ஈழத்தமிழர்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்களே இல்லையா? அவர்கள் நாதியற்றவர்களா? நானிலத்தில் அவர்களின் அபயக்குரல் எங்கும் கேட்கவில்லையா? என்ற கேள்விகள் உலகெங்கிலும் மனசாட்சி உள்ள மனிதர்களை உலுக்க ஆரம்பித்து விட்டன. எனவே சிங்களவர் நடத்திய இனக்கொலையைத் தடுக்கத் தவறிய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஈழத்தமிழருக்கு இழைக்கப்பட்ட கற்பனை செய்ய முடியாத கொடுந்துயரம் குறித்து முழு உண்மையைக் கண்டறியவும், இனகொலை புரிந்த ராஜ பக்சே கூட்டத்தைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தவும் ஒரு விசாரணை குழுவை முதலில் அனைத்து நாடுகள் அமைக்க முன்வர வேண்டும். இந்த நிலையை உருவாக்க உலகெங்கும் உள்ள ஈழத்தமிழ் சகோதர்களும், தமிழ் இன உணர்வாளர்களும், இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் குரல் எழுப்ப வேண்டுகிறேன்.
‘தாயகம்’
வைகோ
சென்னை - 8
பொதுச் செயலாளர்,
15.
மறுமலர்ச்சி தி.மு.க