![]() |
ராக்கெட் வகை வெடிகளே அதிக அளவில் தீ விபத்துக்களை ஏற்படுத்துகின்றன. |
சென்னை, திருச்சி மண்டலத்தில் அதிகமான தீ விபத்துகள் ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை பட்டாசுகளினால் ஏற்படும் தீ விபத்துகளைத் தடுப்பதற்காக தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
தீபாவளி பண்டிகை நாள்களில் மழை இல்லாத காரணத்தினால், இந்த ஆண்டு அதிகமான பட்டாசு விபத்துகள் மாநிலம் முழுவதும் பதிவாகியுள்ளன.
தீபாவளியன்று மட்டும் தமிழகம் முழுவதும் 607 தீ விபத்துகள் பதிவாகியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாள்களில் மொத்தம் 838 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இந்த விபத்துகளில் சுமார் 70 பேர் காயமடைந்திருப்பதாக தீயணைப்புத் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. சென்னை, திருச்சி ஆகிய நகரங்களில் அதிகப்படியான தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. திருநெல்வேலி, மதுரை மண்டலங்களில் குறைவான தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும், இந்த ஆண்டு அதிகமான தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
சென்னை: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, செவ்வாய்க்கிழமை வரை பட்டாசுகளினால் 204 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இந்த தீ விபத்துகளில் மொத்தம் 150 குடிசைகள் எரிந்து நாசமாகியுள்ளன.