நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை இல்லாதவர்கள் என்று அன்னா ஹசாரே குழுவினரை மத்திய மந்திரி வயலார் ரவி சாடினார்.
மத்திய வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகார துறை மந்திரி வயலார் ரவி, ஐதராபாத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அமெரிக்க அமைப்புகளிடமிருந்து நிதி உதவியை பெறுகிற பல்வேறு நிறுவனங்கள் அன்னா ஹசாரே குழுவினருக்கு விருதுகளை அறிவிப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. அன்னா ஹசாரே குழு உறுப்பினர்களான கிரண் பெடி, அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவர்களுக்கு எப்படி இந்த அமைப்புகள் விருதுகள் வழங்குகின்றன?
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது பல குற்றச்சாட்டுக்களை சுமத்தியதற்காக வேண்டுமானால் மகசாய்சாய் விருதுளை அன்னா ஹசாரே குழுவினருக்கு தரலாம் (கிண்டல்). அந்த அமைப்புகளின் விருதுகளை பெறுகிற அளவுக்கு இந்த சமூகத்துக்கு அவர்கள் என்ன நல்லதை செய்து விட்டார்கள்? இவர்கள் நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை இல்லாதவர்கள். இந்திய அரசியலை சீர்குலைக்க சதி செய்கின்றனர்.
ஆந்திராவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவுவது பற்றி கேட்கிறீர்கள். இது கட்சியை பாதிக்காது. தொண்டர்கள் கட்சியில்தான் உள்ளனர். தலைவர்கள்தான் கட்சியை விட்டு விலகுகின்றனர்.
ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மரணம் குறித்து அவரது மனைவி விஜயாம்மா கிளப்பியுள்ள சர்ச்சை குறித்து கருத்து கூற மாட்டேன். ராஜசேகர ரெட்டி எனது நெருங்கிய நண்பராக இருந்தவர். அவர் இறந்த நாளில்தான் என் மனைவியும் இறந்தார்.
ஆந்திர இடைத்தேர்தல் முடிவுக்கு பின்னர் மாநில கட்சி தலைவரையோ, முதல்-மந்திரியையோ மாற்றும் பிரச்சினை எழாது.
இவ்வாறு அவர் கூறினார்.