"தாமரை சங்கமம்" என்ற பெயரில் மதுரையில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில மாநாடு இன்று தொடங்குகிறது. மாநாட்டில் அத்வானி, நிதின் கட்காரி, சுஷ்மாசுவராஜ் மற்றும் தலைவர்கள் பேசுகிறார்கள்.

மாநாடுத் திடல், 37 ஏக்கர் நிலப்பரப்பில் ஜனாகிருஷ்ணமூர்த்தி நகர் என்ற பெயரிலும், மாநாட்டு அரங்கம், 21/2 லட்சம் சதுரஅடி பரப்பளவில் சுகுமாரன் நம்பியார் பெயரிலும் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு மேடை 8 அடி உயரத்தில் 2 அடுக்கு தாமரை வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது.
மாநாட்டுக்கு, மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். மாநில செயலாளர் சுரேந்திரன் வரவேற்றுப் பேசுகிறார்.
அகில இந்திய தலைவர் நிதின்கட்காரி மாநாட்டை தொடங்கி வைக்கிறார். மாநாட்டில் முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி, பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மாசுவராஜ், டெல்லி மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி, முன்னாள் தேசிய தலைவர் வெங்கையாநாயுடு, தேசிய செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன், முன்னாள் மாநில தலைவர் இல.கணேசன், தேசிய செயலாளர்கள் முரளிதரராவ், லெட்சுமணன், மாநில செயலாளர் வானதிசீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
நாளை(வெள்ளிக்கிழமை) பாரதீய ஜனதா கட்சியின் பொதுக்குழு கூட்டம் மாநாட்டுத் திடலிலேயே நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
மாநாட்டில் பல லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்வதற்காக 100 பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நுழைவு கட்டணமாக அவர்களிடம் தலா ரூ.10 வசூலிக்கப்படுகிறது.
நுழைவுச்சீட்டும், 3 வேளைக்கான உணவு கூப்பனும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். மாநாட்டுத் திடலில் 8 பகுதிகளில் உணவு தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் 25 ஆயிரம் பேர் சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டு முகப்பில் தமிழன்னை சிலையும், மேடைக்கு அருகே பாரத மாதா, மீனாட்சி அம்மன் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.
மற்றொரு புறம் கண்காட்சி கூடம் அமைக்கப்பட்டு, அதில் பாரதீய ஜனதா கட்சியின் வளர்ச்சி மற்றும் ஆட்சியின் சாதனைகள் குறித்து படங்கள் வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு பந்தலில் ஒரு லட்சம் பேருக்கு இலவச மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது.
மாநாட்டில் கலந்து கொள்ளும் எல்.கே.அத்வானி, சுஷ்மாசுவராஜ் மற்றும் தலைவர்கள் இன்று காலை தனிவிமானத்தில் வரஉள்ளனர். இதையொட்டி விமானநிலையத்தில் இரவு, பகலாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விமானநிலையம் முதல் மாநாடு நடைபெறும் இடம் வரை வழிநெடுக போலீசார் நிறுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். 11 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு மதுரை வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்து அனுப்பப்படுகின்றன.
தலைவர்கள் தங்கும் ஓட்டல்களில் தீவிர சோதனை போடப்பட்டுள்ளது. நகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பாக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். மாநாட்டு பந்தல் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சல்லடை போட்டு சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். விமானநிலையத்திற்கு வரும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
பாதுகாப்பு ஏற்பாடு குறித்து தென் மண்டல காவல்துறை தலைவர் (ஐ.ஜி.) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
பா.ஜ.க. மாநாட்டிற்கான பாதுகாப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மதுரை மற்றும் சுற்றுப் பகுதிகளில் 11 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 24 மணிநேரமும் வாகனங்கள் அனைத்தும் முழுமையாக சோதனை செய்யப்படுகின்றன. வெடிகுண்டு நிபுணர்களை கொண்ட 25-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மாநாடு நடக்கும் பகுதிகள், விமான நிலையங்கள், பிற மாவட்டங்களில் உள்ள வெடிபொருள் கிடங்குகள் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மாநாடு நடைபெறும் நாட்களில் போக்குவரத்து சிரமமின்றி பொதுமக்கள் சென்று வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிற மாவட்டங்களில் இருந்து சுமார் 3000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். மேலும் சீருடை அணியாத ரகசிய போலீசார் மாநாடு நடைபெறும் இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கண்காணித்து வருகின்றனர்.
முக்கியமாக மாநாடு நடைபெறும் நாட்களில் மதுரையில் இருந்து விமானங்களில் செல்வோர், பயண நேரத்திற்கு முன்பாகவே விமானநிலையம் செல்ல வேண்டும். இதனால் பல்வேறு சிரமங்களை தவிர்க்க இயலும். பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பை தரக் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியின் தாமரை சங்கமம் 5-வது மாநில மாநாட்டை ஒட்டி தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் தொண்டர்கள் மதுரை நோக்கி வர உள்ளனர். வாகனங்கள் எளிதாக மாநாட்டுத் திடலை அடையும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருங்கோட்டம், திருச்சி சார்ந்த மாவட்டங்களை சார்ந்த வாகனங்கள் மேலூர் வழியாக வந்து ஒத்தக்கடையில் தங்கள் வாகனங்களை பதிவு செய்து விட்டு, சிவகங்கை கூட்டுரோடு பாண்டிகோவில் பகுதியில் தொண்டர்களை இறக்கி விட வேண்டும். பின்பு வாகனங்களை ராஜா
கோவை பெருங்கோட்டத்தை சார்ந்த கரூர் உள்ளிட்ட மாவட்ட வாகனங்கள் திண்டுக்கல், வாடிப்பட்டி வழியாக வந்து வாடிப்பட்டி பதிவு மையத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்பு திருமங்கலம் நான்கு வழிச் சாலை வழியாக வந்து ராமேசுவரம் சாலை அருகே தொண்டர்களை இறக்கிவிட்டு வாகனங்களை நிறுத்த வேண்டும்.
கன்னியாகுமரி உள்ளிட்ட மதுரை பெருங்கோட்டத்தை சார்ந்த மாவட்டங்கள் விமான நிலைய சாலை வழியாக வந்து விமான நிலைய மையத்தில் பதிவு செய்யவேண்டும். பின்பு வாகனங்களை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் நிறுத்த வேண்டும். சிறப்பு அனுமதி பெற்ற வாகனங்களுக்கு மட்டும் மாநாட்டுத் திடலிலேயே நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.