பிரணாப் முகர்ஜிதான் அடுத்த குடியரசுத் தலைவர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிக் கொண்டிருககிறது. ஆனால் அவரோ தயங்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் உண்மையில் அவர் குடியரசுத் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இதுவரை இல்லாத அளவுக்கு ரூபாய் மதிப்பு தாழ்ந்து கொண்டே போகிறது. கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத அளவுக்கு கீழே போயிருந்தது ரூபாயின் மதிப்பு. மே மாதமும் இதே நிலைதான் ஏற்படும் என்கிறார்கள். குடியரசுத் தலைவராகி விட்டால் இதுகுறித்தெல்லாம் பிரணாப் கவலைப்படத் தேவையிருக்காது என்பதால் அவர் குடியரசுத் தலைவர் பதவி குறித்து பரிசீலிக்கலாம்.
குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்து விட்டால், சர்வதேச நிதியங்கள் இந்தியா குறித்து எடுக்கும் முடிவுகள் குறித்துக் கவலைப்படத் தேவையிருக்காது. இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து பிறர் கூறும் விமர்சனங்கள் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு போவதாக மிரட்டினால் கவலைப்பட வேண்டியதில்லை.
பணவீக்கம் குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமே எழாது. பணவீக்கம் அதிகரித்து வருவது பெரும் கவலை அளிக்கிறது என்று டிவி கேமராவுக்கு முன்பு நின்று கொண்டு அறிக்கை வாசிக்க வேண்டிய அவசியம் வராது. இதுகுறித்து அவர் பேசவே தேவையில்லை என்பதுதான் இதில் விசேஷமே.
பட்ஜெட் போடத் தேவையில்லை. பட்ஜெட்டின்போது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிதிப்பற்றாக்குறை குறித்துக் கவலைப்படவும் அவசியமில்லை. மானியங்கள் குறித்து மாங்கு மாங்கென்று கவலைப்படத் தேவையில்லை.
ஏதாவது நிதிச் சீர்திருத்த நடவடிக்கையை திட்டமிட்டால் உடனே பாய்ந்து குதறும் கூட்டணிக் கட்சிகளிடமிருந்து மிகப் பெரிய விடுதலை கிடைக்கும். மல்டி பிராண்ட் சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடு, பென்ஷன் சீர்திருத்தம் என எதுபற்றியும் கவலைப்படத் தேவையில்லை.
இப்படி ஏகப்பட்ட பெனிபிட்டுகள் பிரணாப்புக்கு கிடைக்கும், அவர் குடியரசுத் தலைவரானார். என்ன காங்கிரஸ் கட்சிக்குத்தான் ஆலோசனை கேட்க யாரிடம் போவது என்ற மண்டைக் குடைச்சல் ஏற்படும். மற்றபடி பிரணாப்புக்கு நிச்சயம் குடியரசுத் தலைவர் பதவி என்பது பெரும் நிம்மதியான விஷயம்தான்...