ஓர் இனத்தின் அழிவை, குறிப்பிட்ட அந்த இன மக்களுக்கு மட்டும் மட்டுப்படுத்த முடியாது. இந்த இன அழிப்பு வேற்றின மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டிய ஒன்று.
முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டதை நினைவு கூரும் நாளான மே மாதம் 18 ஆம் நாளை வேற்றின மக்களும் ஒன்றுகூடும் லண்டன் நகரின் மையப்பகுதியில் நடத்தப் பிரிட்டன் தமிழர் பேரவை முடிவெடுத்துள்ளது.
நேற்றுமுன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. "ஓர் இனத்தின் அழிவை, குறிப்பிட்ட அந்த இன மக்களுக்கு மட்டும் மட்டுப்படுத்த முடியாது. தமிழர்கள் மட்டும் ஓர் இடத்தில் கூடிநின்று மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செய்வதால் என்ன பயன்?
தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட இந்த இன அழிப்பு வேற்றின மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டிய ஒன்று'' என்ற அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழர் அல்லாத பல்லின மக்கள் முள்ளிவாய்க்காலில் எம்மின மக்கள் கொல்லப்பட்டதை அறிய வேண்டும். துடிதுடித்து இறந்த தமிழ்க் கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் முதியோர்களின் நிலை பற்றி அறிய வேண்டும். எனவே முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை வேற்றின மக்களும் அறியக்கூடிய வகையில் லண்டன் நகரில் மையப்பகுதியில் நடத்த வேண்டும் எனப் பிரிட்டன் தமிழர் பேரவை மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
யூதர்கள் தமது இனவழிப்பு நாளை "ஹோலகாஸ்ட்' என்று பிரகடனப்படுத்தியது போன்று தமிழர்களின் இன அழிப்பு நாளாக "முள்ளிவாய்க்கால் நாள்' பிரகடனப்படுத் தப்பட வேண்டும் எனப் பிரிட்டன் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் என்ற இந்தச் சொல்லானது ஐக்கிய ராச்சிய ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட வேண்டிய சொல் என்ற பிரசாரத்தை யும் தமிழ் மக்கள் முன்னெடுக்கவுள் ளனர்.