Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மதுரையில் பரபரப்பு ராமர் கோவில் அருகே குண்டு வெடிப்பு



மதுரையில் சைக்கிளில் வைக்கப்பட்டு இருந்த "டைம்பாம்'' குண்டு வெடித்தது. ராமர் கோவிலுக்கு அருகில் சதிகாரர்கள் நிகழ்த்திய இந்த குண்டு வெடிப்பால் மதுரையில் பதற்றம் நிலவுகிறது.

மதுரை அண்ணாநகர் பகுதியில் தனியார் டிரஸ்ட்டுக்கு சொந்தமான ஸ்ரீராம் கோவில் உள்ளது. இந்தப் பகுதியில் நேற்று அதிகாலை 3 மணிக்கு பயங்கர சத்தம் கேட்டது.

அப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள் இது குறித்து அண்ணாநகர்  காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே உதவிகமிஷனர் வெள்ளத்துரை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்தார்.

அப்போது ராமர் கோவிலை சுற்றி அமைக்கப்பட்ட கம்பி வேலியின் அருகே ஒரு சைக்கிள் நின்றிருந்தது. அதன் கேரியர் மேல் வைத்திருந்த பாக்சில் இருந்த குண்டு தான் வெடித்தது என்று தெரியவந்தது. அதுவும் அது குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்குமாறு செய்து வைக்கப்பட்டிருந்த டைம்பாம் என்பதும் தெரியவந்தது. இதனால் சைக்கிளில் இருந்த பாக்ஸ், போக்கஸ் கம்பிகள் சேதம் அடைந்தன. அருகில் உள்ள சுவரிலும் சிறிது சேதம் ஏற்பட்டது.

இது குறித்து வெடிகுண்டு பிரிவு  காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வெடிகுண்டை கண்டுபிடிக்கும் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் குண்டு வெடித்த இடத்தில் கிடைத்த 4 சின்ன பேட்டரிகள், வயர், டைம்பாக்ஸ் செட் உள்பட சில பொருட்களை கைப்பற்றினார்கள். அதிகாலை நேரத்தில் குண்டு வெடித்ததால் அந்தபகுதியில் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்பட வில்லை.

சம்பவ இடத்தை புதிதாக பதவியேற்றுள்ள  காவல்துறை  கமிஷனர் சஞ்சய்Öமத்தூர் நேரில் பார்வையிட்டார். விசாரணையை துரிதப்படுத்துமாறு  காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து கோவில் பூசாரி தேவ்சர்மா கூறியதாவது:-

"நான் அண்ணாநகர் பகுதியில் குடியிருந்து வருகிறேன். கடந்த 4 ஆண்டுகளாக இந்த கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறேன். காலை 5 மணிக்கு கோவிலை திறக்க வந்தேன். அப்போது அருகில் இருந்த காவலாளிகள் கோவில் அருகே சத்தம் கேட்டது என்றார்கள். உடனே இது குறித்து நான் எனது அண்ணனும், தலைமை பூசாரியுமான வாசுதேவ் பாண்டேவிற்கு தகவல் கொடுத்தேன். அவர் உடனே இங்கு வந்தார்.



அப்போது கோவில் அருகே இருந்த சைக்கிளில் தான் குண்டு வெடித்தது போன்று காணப்பட்டது. உடனே இது குறித்து  காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தோம். கோவிலின் கம்பி வேலியின் அருகே கடந்த 4 நாட்களாக ஒரு சைக்கிள் செயினால் கட்டப்பட்டு நின்றது. அது குறித்து சனிக்கிழமை  காவல்துறையில் புகார் செய்தோம். இந்த பகுதிக்கு வந்த  காவல்துறையினரிடமும் தெரிவித்தோம்.

இந்த சைக்கிளில் இருந்த கேரியரில் தான் குண்டு வெடித்து சிதறிக் கிடந்தது.''

இவ்வாறு தேவ் சர்மா கூறினார்.

கோவில் காவலாளி மூக்கையா கூறியதாவது:-

"நான் கோவில் மற்றும் அதன் அருகில் உள்ள திருமண மகாலில் காவலாளியாக உள்ளேன். இந்த பகுதியில் பெரிய, பெரிய வீடுகள் இருப்பதால் சுற்றியும் 24 மணிநேரமும் காவல் பணியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அதிகாலை 3 மணிக்கு சத்தம் கேட்டது. இருட்டாக இருந்ததால் நாங்கள் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து இருக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் காலையில் தான் கோவில் அருகே வைக்கப்பட்டிருந்த சைக்கிளில் குண்டு வெடித்ததை கண்டோம். இந்த சைக்கிள் கடந்த 4 நாட்களாக இங்கு நின்றது. இதுபற்றி  காவல்துறையினருக்கு ஏற்கனவே தகவல் கொடுத்தோம்.''

இவ்வாறு காவலாளி கூறினார்.

காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

"சைக்கிள் 4 நாட்களாக செயின் மூலம் கட்டப்பட்டு இருப்பதாக கூறினார்கள். மதுரை நகரில் மழை பெய்து வரும் நிலையில் கண்டிப்பாக செயின் சிறிதாவது துருப் பிடித்து இருக்கும். ஆனால் செயின் புதிதாக இருந்தது.

எனவே கடந்த 4 நாட்களுக்கு முன்பே செட் செய்து குண்டை வைத்திருக்க வாய்ப்பு இல்லை. ஆதலால் தொடர்ந்து இந்த பகுதியை கண்காணித்து நேற்றைய தினம் இரவுதான் இந்த குண்டை வைத்திருக்க வேண்டும். இந்த குண்டு டெட்டனேட்டர் வகையைச் சார்ந்தது. குறிப்பிட்ட ஒரு பிரிவினரை எச்சரிக்கை செய்ய இது போன்ற செயல்களில் ஈடுபட்டு இருக்கலாம்.''

இவ்வாறு  காவல்துறை அதிகாரி கூறினார்.

மதுரையில் தற்போது சித்திரைத்திருவிழா நடந்து வருகிறது. இன்று மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடக்க உள்ளது. நாளை தேரோட்டம் நடக்கிறது. தொடர்ச்சியாக, கள்ளழகர் எதிர்சேவை, அழகர் ஆற்றில் இறங்குதல் ஆகிய முக்கிய வைபவங்கள் நடக்க உள்ளன.

அத்துடன், பாரதீய ஜனதா கட்சியின் 5-வது மாநில மாநாடு வருகிற 10,11 ஆகிய தேதிகளில் விரகனூர் சுற்றுச்சாலையில் நடக்க உள்ளது. இதில் அத்வானி உள்ளிட்ட பா.ஜ.க. மேலிடத்தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் மதுரையில் குண்டு வெடித்துள்ளது  காவல்துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஏற்கனவே, கடந்த ஆண்டு இறுதியில் அத்வானி வந்திருந்தபோது, திருமங்கலம் அருகே ஆலம்பட்டி பாலத்தில் பைப் வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது.

தற்போதும் அத்வானி வரஇருக்கும் நேரத்தில், அதுவும் ராமர் கோவிலுக்கு அருகே, சதிகாரர்கள் குண்டு வெடிப்பை நிகழ்த்தி இருக்கிறார்கள். எனவே சதிகாரர்கள் யார் என்று கண்டுபிடிக்க  காவல்துறை புலன்விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

மதுரை அண்ணாநகர் பகுதியில் சைக்கிளில் டைம்பாம் வெடித்தது, கடந்த ஓராண்டில் நடந்த 5-வது வெடிகுண்டு சம்பவம் ஆகும்.

ஏற்கனவே கடந்த ஆண்டு மே மாதம் மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் குண்டு வெடித்தது. அதன்பின்பு புதூர் பஸ்நிலையம் அருகே உள்ள டெப்போவில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது.

தொடர்ந்து மதுரையில் இருந்து திருவாதவூருக்கு சென்ற அரசு டவுன்பஸ்சில் சீட்டுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த டிபன் பாக்ஸ் வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டது. அந்த டிபன்பாக்ஸ் குண்டை கண்டுபிடித்து  காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த நபர் சில தினங்களில் தற்கொலை செய்து கொண்டார். இந் 3 சம்பவங்களிலும் குற்றவாளிகள் பிடிபடவில்லை.

இதையடுத்து, கடந்த செப்டம்பர் 28-ந் தேதி ரதயாத்திரைக்காக பா.ஜ.க.தலைவர் அத்வானி மதுரை வந்தார். அவர் மதுரை, திருமங்கலம், ராஜபாளையம் வழியாக கேரளா செல்ல இருந்தார். அப்போது அத்வானி செல்லும் வழியான திருமங்கலத்தை அடுத்து உள்ள ஆலம்பட்டி பாலத்தின் அடியில் இருந்து பைப் வெடிகுண்டை  காவல்துறை கண்டு பிடித்து அகற்றினார்கள். இந்த சம்பவத்தில் சிலர் கைது செய்யப்பட்டாலும், முக்கிய குற்றவாளி கைது செய்யப்படவில்லை.

இத்தனை சம்பவங்களிலும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் தற்போது, ஸ்ரீராம் கோவில் அருகே டைம்பாம் வெடித்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post