Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

12 நாட்களின் பின்னர் இன்று பெரும் எதிர்பார்ப்புடன் விடுதலையாகும் கலெக்டர்



சத்தீஷ்காரில் கடத்திச் செல்லப்பட்ட மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனனை விடுவிப்பது தொடர்பாக மாவோயிஸ்டுகளின் தூதர்களுக்கும், அரசு பிரதிநிதிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, கலெக்டர் இன்று விடுதலை ஆகிறார்.

சத்தீஷ்கார் மாநிலத்தில் சுக்மா மாவட்ட கலெக்டராக இருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த அலெக்ஸ் பால்மேனன், கடந்த 21-ந் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச்செல்லப்பட்டார்.

அவரை விடுவிக்க வேண்டுமானால், ஜெயிலில் உள்ள தங்கள் இயக்கத்தை சேர்ந்த 17 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், தங்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்தனர்.

கலெக்டரை மீட்பது தொடர்பாக, மாவோயிஸ்டுகள் நியமித்த தூதர்களான பி.டி.சர்மா, ஹர்கோபால் ஆகியோருடன், மாநில அரசால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

2 சுற்று பேச்சுவார்த்தைகள் முடிந்தவுடன், மாவோயிஸ்டு தூதர்கள், காட்டுக்குள் சென்று மாவோயிஸ்டுகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு திரும்பினர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் 4-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, இருதரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. சத்தீஷ்கார் மாநில ஜெயில்களில் வாடும் பழங்குடியின கைதிகள் மீதான வழக்குகளை ஆய்வு செய்ய அரசு தரப்பு தூதர் நிர்மலா பச் தலைமையில் உயர் அதிகார கமிட்டி அமைக்க அரசு ஒப்புக்கொண்டது.

இந்த கமிட்டியில், மாநில தலைமைச்செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரும் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும், கலெக்டர் விடுவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் இந்த கமிட்டி செயல்பட தொடங்கும் என்றும், அந்த உடன்பாட்டில் கூறப்பட்டு உள்ளது. இந்த 2 பக்க உடன்பாட்டில், இருதரப்பு தூதர்களும் கையெழுத்திட்டனர்.

அதன்பிறகு இதுபற்றி மாவோயிஸ்டுகளின் தூதர்கள் கூறுகையில்; "நல்லெண்ண நடவடிக்கையாக, 48 மணி நேரத்தில் கலெக்டர் விடுதலை ஆவார்'' என்று தெரிவித்தனர்.

சத்தீஷ்கார் முதல்-மந்திரி ராமன் சிங்கின் முதன்மை செயலாளர் என்.பைஜேந்திர குமார் கூறுகையில்; இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாடு கலெக்டரின் விடுதலைக்கு வழிவகுத்து உள்ளது என்றும், எனவே அவர் 2-ந் தேதி (இன்று) விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், கலெக்டர் அலெக்ஸ் பால்மேனனை நாளை (வியாழக்கிழமை) விடுதலை செய்யப் போவதாக நேற்று இரவு மாவோயிஸ்டுகள் அறிவித்தனர்

இதுதொடர்பாக, மாவோயிஸ்டுகளின் தெற்கு பஸ்தார் மண்டல குழுவின் சார்பில் உள்ளூர் ஊடகங்களுக்கு நேற்று இரவு குறுந்தகவல் ஒன்று அனுப்பப்பட்டது. அதில், "கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் 3-ந் தேதி பொதுமக்கள் முன்னிலையில் விடுதலை செய்யப்படுவார்'' என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பி.டி.சர்மா, ஹர்கோபால் ஆகியோருக்கு அவர்கள் நன்றியும் தெரிவித்து உள்ளனர்.

எனவே 12 நாட்களாக நீடித்து வந்த கடத்தல் பிரச்சினை நாளையுடன் முடிவுக்கு வருகிறது.

முன்னதாக நேற்று மாலை மாவோயிஸ்டு தரப்பு தூதர்கள் பி.டி.சர்மா, ஹர்கோபால் ஆகியோர் முதல்-மந்திரி ராமன்சிங்கை நேற்று சந்தித்து பேசினர். அப்போது, கலெக்டர் கடத்தல் பிரச்சினையில் தீர்வு ஏற்பட உதவியதற்காக அவர்களுக்கு ராமன்சிங் பாராட்டும், நன்றியும் தெரிவித்தார்.

உடன்பாட்டை மதித்து கலெக்டரை மாவோயிஸ்டுகள் விடுதலை செய்வார்கள் என நம்புவதாக ராமன்சிங் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

மாவோயிஸ்டுகளின் தூதர்களுக்கும், அரசு தரப்பு பிரதிநிதிகளுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாடு குறித்தும், தனது கணவர் விரைவில் வீடு திரும்ப இருப்பது குறித்தும் கலெக்டர் அலெக்ஸ் பால்மேனனின் மனைவி ஆஷா மகிழ்ச்சி தெரிவித்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post