தமிழர்கள் மறந்து போன மொழிப் போர் ஈகிகள் மணி மண்டபம். நினைவு கூர்வோமா ? (படங்கள்)
மொழிப் போர் ஈகிகளுக்கு என்று ஒரு மண்டபம் தமிழக அரசால் சென்னையில் காந்தி மண்டபம் அருகே கட்டப்பட்டுள்ளது என்று பலருக்கும் தெரியாது . இந்த மண்டபத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து போராடி வீரமரணம் அடைந்த அனைத்து போராளிகளின் படங்களும் உள்ளது. சிலர் தமிழக காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர் . சிலர் சிறையில் இறந்து போயினர் . சிலர் தங்கள் உடலை தீக்கு இரையாக்கினர். இந்திய சுதந்திர போராட்டத்தை விட ஒரு வலிமையான போராட்டம் இந்தி எதிர்ப்பு போராட்டம் . இந்த போராட்டம் மட்டும் நடைபெறவில்லை எனில் இன்று தமிழ்நாட்டில் யாரும் தங்கள் தாய் மொழியில் பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள். தற்போது எப்படி ஆங்கிலம் ஐம்பது விழுக்காடு தமிழில் கலந்து விட்டதோ, அதே போல் இந்தியும் கணிசமாக தமிழில் கலந்து போயிருக்கும் . இல்லங்களில் , தொலைகாட்சிகளில் ஹிந்தி மட்டுமே நடமாடிக் கொண்டிருக்கும். அவ்வாறு நிகழாமல் நம் மொழியையும் இனத்தையும் காத்தவர்கள் இந்த மொழிப் போர் தியாகிகள்.
ஆனால் இப்படிப் பட்ட தியாகத்தை செய்தவர்களை பற்றி எத்தனை தமிழர்களுக்கு தெரியும் , எத்தனை மாணவர்களுக்கு தெரியும் ? இன்று இந்த தியாகிகள் மண்டபத்தில் ஆள் நடமாட்டமே இல்லை . யாரும் இங்கு வந்து இத்தகைய இனத்திற்காக உயிர் நீத்த வீரர்களை நினைவு கூர்வதில்லை . இந்த மண்டபமும் பராமரிக்கப் படுவதில்லை. இந்த மொழிப் போர் குறித்து எந்த விழிப்புணர்வு பலகைகளும் இந்த மண்டபத்தில் இல்லை. இவர்கள் எதற்காக உயிர் நீத்தார்கள், இந்தி திணிப்பு எவ்வாறு நடந்தது , ஏன் இவர்கள் போராடினார்கள் என்ற எந்த வரலாறுகளும் எழுதப்படவில்லை . இந்த நிலையில் தான் தற்போது இந்த மண்டபம் உள்ளது . இப்படி இருக்கும் நிலையில் எவ்வாறு இன்றைய தலைமுறை மொழிப் போர் தியாகிகளை நினைவு கூர்வர் ? பள்ளி பாடங்களிலும் இவர்களின் தியாகத்தை பற்றி எந்தக் குறிப்பு இல்லை . வரலாற்றில் மறைக்கப்பட்டது இவர்களுடைய ஒப்பற்ற தியாகங்கள். தமிழக அரசே இதை மறைத்து விட்டது . தமிழ் இனத்தின் தன்னிகரில்லா இந்த தியாகிகளை இனியாவது தமிழர்கள் அனைவரும் நினைவு கூர்வோம் . உரிய மரியாதை செலுத்துவோம் . வாழ்க தமிழ் .