கடந்த ஒரு வாரமாக தமிழகத்திலிருந்து வரும் முட்டை கோழிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
பறவைக்காய்ச்சல் அறிகுறி இருப்பதாக தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு இறக்குமதி செய்யப்படும் கோழிகள் மற்றும் முட்டைகளுக்கு கேரள அரசு தடை விதித்திருந்தது.இதனால் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கில் முட்டைகள் தேக்கமடைந்தது.இந்த நிலையில் தடையை விலக்கிக் கொள்வது குறித்து நாமக்கல் மண்டல கோழிப் பண்ணையாளர்கள் கேரளா முதலமைச்சர் உம்மன் சாண்டியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
இதன்பின், தடையை நீக்க கேரள அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. இதன்படி நாளை பகல் 12 மணியில் முதல் கேரளா எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள் வழியாக முட்டை மற்றும் கறிக்கோழி வாகனங்கள் அனுமதிக்கப்பட உள்ளது.
எனினும் இவ்வாறு வரும் வாகனங்கள்,முட்டைகள் மற்றும் கறிக்கோழிகள் தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்பட்டன என்பதற்கும் அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் இல்லை என்பதற்கான கால்நடை பராமரிப்புத் துறையின் சான்றிதழையும் காண்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.