கடந்த சில நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த இலங்கை தமிழ் அகதி திரு செந்தூரன் அவர்களை சிறையில் இருந்து விடுவித்த தமிழக காவல்துறை, மீண்டும் அவரை பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமிற்கு மாற்றியுள்ளது.
இந்நிலையில்,அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் செந்தூரன் மற்றும் எட்டு இலங்கை தமிழ் அகதிகளுக்கு, ஏனைய இலங்கை அகதிகள் முகாமில் உள்ள அகதிகளுக்கு தமிழக அரசு கொடுக்கும் ஒரு நாள் உணவு பணமான ரூபாய் 70 தரப்படவில்லை அத்தோடு போதுமான உணவும் கொடுக்கப்படவில்லை.
அத்தோடு அங்கு தடுத்து வைக்கப்படிருக்கும் சிலருக்கு நீரிழிவு நோய் இருப்பதனால் அதற்கான பிரத்தியேகமான உணவு இல்லாத நிலையில் இவர்கள் மிக சிரமத்துக்கு மத்தியில் உள்ளனர்.
இதேவேளை, இதை கேள்விப்பட்ட சில தமிழக வழக்குரைஞர்கள் தாமாக முன்வந்து ஒரு மாதத்திற்கு தேவையான சில உணவு பொருட்களை இவ்வாறு சிரமப்படும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு வழங்கியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக வழக்கறிஞர் திரு ராஜீவ் காந்தி அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, தானும் சில வழக்கறிஞர்களும் சேர்ந்தே சில உணவு பொருட்களை சிரமப்படும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு வழங்கியதாகவும், இவ்வாறு வழங்கப்பட்ட உணவு பொருட்கள் ஒரு மாதத்திற்கே போதுமானதாக இருப்பதாகவும்,அடுத்து வரும் நாட்களுக்கு தேவையான உணவு பொருட்களை பெறுவதில் இவர்கள் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள தமிழ் அகதிகளின் நலனில் அக்கறை காட்ட துடிக்கும் தமிழக அரசு,தமிழ் நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் நலனில் அக்கறை காட்ட தயங்குவது ஏனோ?