Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அடுத்த அமெரிக்க அதிபர் யார்???

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ஒபாமாவும் மிட் ராம்னியும் கடைசிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர்.

இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஒபாமா : சர்வதேச நாடுகளுக்கு அதிகார மையமாக திகழும் அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், விஸ்கான்சின் மாகாணத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளரான அதிபர் ஒபாமா பிரச்சாரம் செய்தார். அப்போது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதல், அனைவருக்கும் கல்வி, அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை ஆகியவை குறித்து ஒபாமா பேசினார்.

“என்னுடன் இணைந்து பணியாற்ற விரும்பினால், என்னுடன் சேர்ந்து சில வீடுகளின் கதவை தட்டி வாக்கு சேகரியுங்கள். எனக்காக தொலைபேசியில் வாக்கு சேகரியுங்கள். விஸ்கான்சினிலும் இந்த தேர்தலிலும் நாம் வெற்றி பெறுவோம். நாம் எதைத் தொடங்கினோமோ, அதை வெற்றியுடன் முடிப்போம்” என உணர்ச்சிப்பூர்வமாக ஓட்டு சேகரித்தார்.

ஒபாமா மீது ராம்னி புகார் : மீண்டுமொரு முறை தன்னை அதிபராக தேர்ந்தெடுக்குமாறு ஒபாமா வலியுறுத்திய நிலையில், ஏற்கனவே அவர் அளித்த வாக்குறுதியை காப்பாற்ற தவறிவிட்டார் என குற்றம்சாட்டியுள்ளார் குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ராம்னி.

வெர்ஜினியா மாகாணத்தில் வாக்குசேகரித்த ராம்னி, கடந்த முறை வாக்களித்த மக்களை அதிபர் ஒபாமா ஏமாற்றிவிட்டதாக தெரிவித்தார். மாற்றத்தை ஏற்படுத்துவதாக அதிபர் ஒபாமா கூறுகிறார். ஆனால் மாற்றம் என்பது வெறும் வார்த்தையில் இல்லை. ஒரு செயல் வெற்றியடையும்போதுதான் அதனை அளவிட முடியும். 4 ஆண்டுகளுக்கு முன் ஒபாமா பெரிய அளவில் வாக்குறுதிகள் அளித்தார். ஆனால் பெரிய அளவில் எதையும் செய்யவில்லை.

அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரச்சாரம் ஓய்ந்து இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்த சூழலில் அதிபர் தேர்தல் தொடர்பாக வெளியான கடைசிக்கட்ட கருத்துக்கணிப்புகளில் ஒபாமாவுக்கும் மிட் ராம்னிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என தெரியவந்திருக்கிறது. 
[vuukle-powerbar-top]

Recent Post