இரு நாடுகளுக்கு இடையே ராணுவ உறவை பலப்படுத்துவது பற்றி முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக, இந்திய ராணுவ தளபதி விக்ரம்சிங் அடுத்த மாதம் இலங்கை செல்கிறார்.
இந்தியா–இலங்கை ராணுவத்துக்கு இடையே நெருங்கிய உறவு இருந்து வருகிறது. இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியா பயிற்சி அளித்து வருகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது, லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களை ராணுவம் கொன்று குவித்தது. இதனால், இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியா பயிற்சி அளிப்பதற்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அனைத்துக்கட்சியினரின் கடும் எதிர்ப்பு காரணமாக, தாம்பரத்தில் பயிற்சி பெற்ற 9 இலங்கை ராணுவத்தினர் கடந்த ஜூன் மாதத்தில் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தியாவில் இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்று, தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதி இருக்கிறார். ஆனால், தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி, இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதில் இந்தியா உறுதியாக இருந்து வருகிறது. இரு நாடுகளும் இணைந்து, அடுத்த ஆண்டில் கூட்டு கடற்படை பயிற்சி முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் மனஉணர்வை புண்படுத்தாத வகையில், இந்த பயிற்சியை வேறு பகுதியில் நடத்தும்படி ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி உத்தரவிட்டு இருக்கிறார்.
இந்த நிலையில், இந்திய ராணுவ தளபதி விக்ரம்சிங், அடுத்த மாதம் (டிசம்பர்) 3–வது வாரத்தில் இலங்கை செல்கிறார். அவருடைய பயண தேதியை இரு நாட்டு அதிகாரிகளும் கலந்து பேசி முடிவு செய்வார்கள். இந்தியா–இலங்கை ராணுவத்துக்கு இடையே ராணுவ உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்த சுற்றுப்பயணத்தின்போது முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.