தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பொருளாளர் ஸ்டாலின், பொதுச் செயலாளர் அன்பழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி இலங்கை தமிழர் வாழ்வுரிமையை பாதுகாக்க வலியுறுத்தி சென்னையில் டெசோ மாநாட்டு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இலங்கை தமிழர் நலனை பாதுகாக்க பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரதி பிரதமர் மன்மோகன்சிங்கிடம் வழங்கப்பட்டது.
அதே போல் மாநாட்டு தீர்மானங்களை ஐ.நா., சபையில் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய பிரதியை தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான டி.ஆர்.பாலுவும் ஐ.நா., சபையில் ஒப்படைப்பர் என முடிவு செய்யப்பட்டது. அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்றை ஆலோசனை கூட்டத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலேயே தி.மு.க., தற்போது டெசோ ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருவதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மத்திய அமைச்சரவையில் இருந்து திரிணமூல் காங் வெளியேிறய பிறகு தான் தி.மு.க., இந்த டெசோ ஆலோசனைக் கூட்ட அறிவிப்பை வெளியிட்டது. திரிணாமுல் காங்கிரஸ் வெளியேறிய பிறகு தி.மு.க., வின் பலம் மத்திய அமைச்சரவையில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையிடம் மறைமுகமாக நட்பு பாராட்டி வரும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவதாக கூறபபடுகிறது.