கூடங்குளம் அணு உலையை மூட வேண்டுமென்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் வேளையில், அணுசக்தி மட்டுமே இந்தியாவின் எதிர்கால மின்திட்டங்களுக்கு சிறந்தது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் எதிர்கால அணுமின் திட்டங்களுக்கு எதிரே உள்ள சவால்களை சந்திப்பது குறித்த கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது. இதில், எரிசக்தி திட்டங்களில் நிலக்கரி மற்றும் எண்ணெய் எரிவாயு நீண்ட காலத்திற்கு உகந்ததல்ல என வல்லுனர்கள் தெரிவித்தனர்.
மேலும், நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் எரிவாயு விலை உயர்வு போன்றவற்றை கருத்தில் கொண்டு மாற்று வழியாக அணுமின் திட்டங்களை அதிகம் செயல்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினார்.
கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, அணுமின் நிலையங்கள் பற்றி சிலர் தவறான தகவல்களை பரப்புவதாகவும், இவற்றை களைய மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
கூடங்குளம் மூன்று மற்றும் நான்காம் அணு உலைகளுக்கு ரஷ்ய நிறுவனத்தையும் ஒரு பொறுப்பாளியாக்க பிரதமர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.