இந்தியா வரும் இலங்கை அதிபர் ராஜபக்ச மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க வரும்போது,அவருக்கு எதிராக அங்கு மதிமுக போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை சிங்கள இனவாத அரசு முப்படைகளை ஏவி எங்கள் தமிழக்குல ரத்த உறவுகளை கோரமாக கொன்று அழித்த கொடியவன் ராஜபக்ச, மத்திய பிரதேச மாநிலத்தில் சாஞ்சியில் செப்டம்பர் 21 ஆம் தேதி புத்தமதம் தொடர்பான கல்வி மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக அழைத்துள்ளதாகவும், ராஜபக்சே அதில் பங்கேற்கப் போவதாகவும், பாரதிய ஜனதா கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
கவுதம புத்தர் பெருமகனார் பெயரை உச்சரிப்பதற்கு கூட அணுவளவும் தகுதி இல்லாத கொடிய கொலைகாரன்தான் ராஜபக்சே. புத்தரின் பெருமை பேசும் விழாவில் ராஜபக்ச கலந்துகொண்டால் புத்தரின் எலும்புகள் கூட அதை மன்னிக்காது.
மத்தியில் காங்கிரஸ் தலைமை தாங்கும், சோனியா காந்தி இயக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஈழத்தமிழர்களை அழிக்க சிங்கள அரசுக்கு ஆயுதங்களும், ஆயிரக்கணக்கான கோடிகளும் கொடுத்து, தமிழ் இனக்கொலைக்கு உடந்தையாக செயல்பட்டு இன்றுவரை மன்னிக்க முடியாத பல துரோகங்களை செய்து வருகிறது.
புத்தரின் பெயரைச் சொல்வதற்கு எந்த அருகதையும் இல்லாது தமிழர்களை படுகொலை செய்த சிங்கள இனவாத ராஜபக்ச அரசுக்கு, புத்தரின் புனிதப்பொருள்களை அனுப்பக்கூடாது என்று வற்புறுத்தி யிருந்தேன். ஆனால், தமிழர்களின் மன வேதனைகளை உதாசினப்படுத்திவிட்டு புத்தர் பெருமானின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப்பொருள்களை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் குமாரி செல்ஜாயும், தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநர் நாயகம் பிரவீண் ஸ்ரீவத்சவாவும் கொழும்புக்கு கொண்டுபோய் தமிழர்களின் ரத்தம் தோய்ந்த ராஜபக்ச கரங்களில் ஒப்படைத்தனர்.இதற்கு என்றைக்கும் மன்னிப்பே கிடையாது.
மத்திய பிரதேசத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவரான வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், சிங்கள அரசு பணம் கொடுத்தாலும் இந்திய அரசு ஆயுதங்களை விற்காது என்று துணிச்சலாக முடிவெடுத்து அனைத்துக்கட்சி கூட்டத்திலும் அறிவித்தார். அதனையே செயல்படுத்தினார். ஆனால் இன்றோ உடல் நலம் மிக நலிந்து பேசவும் முடியாமல் அடல் பிகாரி வாஜ்பாய் படுத்த படுக்கையாக இருப்பதால்தான் இப்படிப்பட்ட மன்னிக்க முடியாத துரோகம் தமிழருக்கு செய்யும் கேடுகெட்ட செயலை சுஷ்மா சுவராஜூம், மத்திய பிரதேச பா.ஜ.க. அரசும் அறிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி தலைவர் நிதின் கட்காரியும், ஈழத்தமிழர்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்டுள்ள யஷ்வந்த்சின்கா போன்ற பாரதிய ஜனதா கட்சி தலைவர்களும் மகிந்த ராஜபக்சவை புத்தர் விழாவுக்கு அழைக்கும் முடிவை ரத்து செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
எனது நியாயமான இந்த வேண்டுகோளை உதாசீனம் செய்து மாபாவி ராஜபக்சவேவை மத்திய பிரதேச சாஞ்சியின் விழாவுக்கு அழைத்து வந்தால், அதனை எதிர்த்து சாஞ்சியில் செப்டம்பர் 21 ல் எனது தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கருப்புக்கொடி போராட்டம் நடத்தும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.